Monday, June 27, 2011

நகரம் நித்ர போதுன்ன வேல 2011 (Nagaram Nidhra Pothunna Vela) - தெலுகு பட விமர்சனம்

இந்த படத்தின் விமர்சன பதிவை படிக்கும் முன்பு இந்த படத்தை பற்றிய அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய நம்முடைய முன்னோட்ட பதிவை ஒரு முறை பார்க்கவும்.பிறகு இந்த பதிவை புரிந்து கொள்வது சுலபமாகிவிடும். குறிப்பாக படத்தின் பின்னணி மற்றும் எதிர்ப்பார்ப்பு பற்றி தெரிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.

கடந்த சில ஆண்டுகளாக இறங்குமுகமாக இருக்கும் நடிகை சார்மியின் மார்கெட்டை சரிகட்ட அவரும் பல முயற்சிகளை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார். அதீத கவர்ச்சி காட்டி நடித்த பல படங்கள், தனி நாயகியாக (அருந்ததியை பார்த்து சூடு போட்டுக்கொண்ட) மங்களா படம் - இது ஸ்பைடர்மேன் இயக்குனர் சாம் ரெய்மியின் Drag me to Hell படத்தின் தழுவல்-, ஒரே ஒரு குத்தாட்ட பாடல் போட்ட படம், ராம் கோபால் வர்மாவின் வித்தியாச படம் -தொங்கால முட்டா-, என்று பல படங்கள். ஆனாலும் முடிவு ஒன்றுதான் - படுதோல்வி. சரி இனிமேல் விஜயசாந்தி போல புரட்சிகரமான பாத்திரங்களை முயற்சிப்போம் என்று துணிந்து நடித்த படமே நகரம் நித்ர போதுன்ன வேள (நகரம் உறங்கும் வேளை). அருமையான, கவித்துவமான தலைப்பு கொண்ட இந்த படத்தில் ஜோடியாக (?!?) நடிப்பவர் ஜகபதி பாபு. இவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு ஹிட் படத்திற்காக துடித்துக்கொண்டு இருப்பவர்தான். இப்படி ஒரு வெற்றிப்படதிற்க்காக ஏங்கும் இரு முன்னணி நட்சத்திரங்கள் சேர்ந்து வந்ததாலேயே இந்த படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு கூடியது.

படத்தின் பின்னணி: இந்த படத்தில் முதல் பாடலாக இருக்கும் அந்த தெலங்கானா / பிராக்ஷனிஷ பாடலை பலமுறை தொடர்ந்து டிரைலரில் ஒளிபரப்பி ஒருவிதமான எதிர்ப்பார்ப்பை உருவாக்கியிருந்தார்கள். அதுவும் இல்லாமல் ஜகபதி பாபுவின் அந்த டைட்டில் சாங் (நித்ர போதுந்தி பட்னம்), அருமையான வரிகளுடன் தாலாட்டி தூங்க வைக்கும் தன்மையை கொண்டிருப்பதால் மற்ற பாடல்களும், படமும் நன்றாகவே இருக்கும் என்று நம்பி இருந்தேன். அதுவுமில்லாமல் படத்தின் இயக்குனர் வேறு இது ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களின் பின்னணி கதை என்றெல்லாம் சொல்லி இருந்தார். அதுவும் எதிர்ப்பார்ப்பை கூட்டியது. மேலும் அந்த லிப் டு லிப் முத்தம் பற்றிய தகவல் கசிந்தது இளசுகளின் மத்தியில் கிலுகிலுப்பை ஏற்படுத்தியது. இதைதவிர கடந்த நான்கு வாரங்களில் ரிலீஸ் ஆகும் முதல் நேரிடை தெலுங்கு படம் இது என்பதால் மேலும் ஒரு ஆவல். இப்படியாக பலவிதமான எதிர்ப்பர்ப்புகளுடன்  நுழைந்தேன்.

படத்தின் கதை: தனியார் தொலைக்காட்சியில் பனி புரியும் ஒரு துணிச்சலான பெண் நிருபர். அவருடைய சமுதாய நல்லெண்ண சிந்தனைகள் நிறைந்த செய்திகளை,ரேட்டிங் வராது என்பதால் ஒளிபரப்ப மறுக்கிறார் தொலைக்காட்சியின் அதிபர். அதனால் கடுப்பான அந்த நிருபர் "இன்று இரவு நகரத்தில் நடக்கும் அத்தனை தவறான காரியங்களையும் வெளிக்கொணருகிறேன்" என்று கிளம்புகிறார். நிற்க. இது கதை அல்ல. ஆனால் இனிமேல் நான் சொல்லப்போகும் ஒன் லைனரை கவனிக்கவும்.

துணிச்சலான அந்த பெண் நிருபரை துறத்துகிறது ஒரு கொலைகார கும்பல். எதற்க்காக துறத்தப்படுகிறோம் என்பதே தெரியாமல் ஓடுகிறார் அந்த நிருபர். அவரை காப்பாற்றுவது ஒரு மர்மமான நபர். அவன் பேசுவது உண்மையா என்பது அவனுக்கே சந்தேகமாக இருக்கிறது. ஆனால் அவனது துடுக்குத்தனமான (ரா.பார்த்திபன் போன்ற) கேள்விகளால் பலரும் கடுப்பாகின்றனர். இவர்கள் இருவரும் அப்படி எந்த ஒரு உண்மையால் துறத்தப்படுகின்றனர்?

இப்படி ஒரு ஒன் லைனர் இருந்தால் எந்த ஒரு பெரிய நட்சத்திரத்தின் கால்ஷீட்டையும் (நன்கு பேசத்தெரிந்த) ஒரு இயக்குனரால் இலகுவாக பெற இயலும். இங்கேயும் அதுதான் நடந்துள்ளது. ஆனால் இயக்கவே தெரியாத ஒரு இயக்குனரிடம் இந்த ஒரு த்ரில்லர் கதை மகா மொக்கை கதையாகி நின்றதே இந்த படத்தின் அடுத்த கட்டம்.

மொக்கையாகிப்போன திரைக்கதை: ஒரு கல்லூரி மாணவர்கள் சுற்றுலா செல்லும்போது காட்டில் அவர்கள் ஒரு பென் டிரைவை கண்டெடுக்கிறார்கள். அது நிஹாரிகா என்ற தொலைகாட்சி நிருபருடயது. அதில் இருக்கும் சம்பவங்களால் கவரப்பட்ட அவர்கள் அந்த தொலைக்காட்சி அலுவலகம் செல்கிறார்கள். ஆனால் நிஹாரிகா காணாமல் போய்விட்டது அங்கே சென்ற பின்னரே தெரியவருகிறது. மறுபடியும் அந்த காட்டிற்கு வந்து தேடும்போது இரத்தம் தோய்ந்த சில இடங்களை பார்க்கிறார்கள். அப்போது நிஹாரிகாவின் தோழி இதுவரை நடந்தவற்றை பிளாஷ் பேக்கில் சொல்கிறார்.

பிளாஷ் பேக்: எதிர்கட்சி தலைவர்,  நாட்டில் வன்முறை, கலவர வெறியாட்டங்களை தூண்டிவிட்டு, ஆட்சி மாற்றம் நடத்தி முதல்வராக துடிக்கிறார். அவரது இந்த சதியாலோசனை நிஹாரிகாவின் கேமராவில் அவரையறியாமலேயே பதிவாகி விடுகிறது. அப்போதுதான் அவர் நகரம் தூங்கும்போது அதன் குற்றப்பின்னணியை கண்டறிய புறப்படுகிறார். அவரை கொன்று அந்த பதிவான சங்கதிகளை அழிக்க ஆட்களை ஏவுகிறார் எதிர்கட்சி தலைவர் (இவர் பார்ப்பதற்கு N.T.R மாதிரியே வேறு இருக்கிறார்). அப்போது அவரை காப்பற்றுகிறார் ஜகபதி பாபு. இதன் பின்னர் என்ன நடந்தது என்பதை தயவு செய்து நீங்கள் தெரிந்து கொள்ளாமலே இருத்தல் நலம். அப்படி தேய்ந்து கொள்ள ஆசைப்பட்டு படத்திற்கு சென்றீர்கள் என்றால் (ஒன்று) பாதியிலேயே ஓடி வந்து விடுவீர்கள் (இரண்டு) கடுப்பாகி விடுவீர்கள்.

ஏனென்றால் படம் அதுவரையாவது ஓரளவுக்கு சுமாராக போய்க்கொண்டு இருந்தது. அதற்க்கு பிறகு, அய்யோடா சாமி, சொல்லவே முடியல. படம் திடீரென்று காந்தியின் அஹிம்சா போதனைகளை கொண்டு முன்னேறுகிறது. அதாவது பின்னணியில் காந்தி சிலை இருக்கும், அதன் முன்னே அரசியல்வாதிகளை நக்சலைட்டுகள் (அவங்கதானே?) வந்து கொன்று விட்டு செல்கிறார்கள். அதாவது நியாயம் கேட்டு நிஹாரிகா அஹிம்சா வழியில் போராடியதால் நக்சலைட்டுகள் கொதித்து எழுந்து அந்த அரசியல்வாதிகளை கொன்றுவிட்டு மறுபடியும் காட்டிற்கே சென்றுவிடுவார்கள். நிஹாரிகாவின் கையில் ஒரு இந்தியக்கொடியை கொடுத்துவிட்டு மக்களும் சென்று விடுவார்கள். நம்ம தலையில் மொளகா அரைத்து விட்டு இயக்குனரும் சென்று விடுவார்.

நடிப்பு: வில்லனாக நடிப்பவர் ஓரளவுக்கு சுமாராக நடித்திருக்கிறார். இந்த படத்தை பார்த்த ஜகபதி பாபு ரசிகர்கள் கண்டிப்பாக மனம் நொந்து போய் இருப்பார்கள். நான் அவரின் விசிறி கிடையாது என்றாலும் ஜகபதி பாபுவின் சில படங்களில் அவரது அற்புதமான நடிப்பை கண்டு வியந்திருக்கிறேன். இப்போதெல்லாம் அவர் எந்த பாத்திரம் கிடைத்தாலும் ஒக்கே சொல்கிறார் போலும், இல்லை என்றால் இந்த படத்தில் அவர் நடிக்க சம்மதித்தது எப்படி என்பது அவருக்கே புரியாத புதிராகும். சார்மி, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். பேசாமல் மறுபடியும் சார்மி உச்சகட்ட கவர்ச்சிக்கே திரும்புவதே உசிதம். மற்றபடி படத்தில் சொல்லிக்கொள்ளும்படி வேறொன்றும் இல்லை.

இயக்கம் - இயக்குனர்: கண்டிப்பாக இந்த படத்தின் இயக்குனர் (பிரேம்ராஜ்) கையில் கிடைத்தால் அவருக்கு ஒரு பத்து, பதினைந்து டிவிடிக்கள் கொடுத்து அவற்றை பார்க்கும்படி சொல்வேன். ஏனென்றால் இவருக்கு படமெடுப்பது எப்படி என்ற அடிப்படையே சரியாக தெரியவில்லை. ஏன் இவ்வளவு கோபப்படுகிறேன் என்றால் படம் வருவதற்கு முன்பும், ரிலீஸ் ஆன பின்பும் இவர் செய்த சேஷ்டைகள் அப்படி. படம் வருவதற்கு முன்பு படத்தில் சிறந்த காட்சி எது என்று கேட்டால் சார்மியும், ஜகபதி பாபுவும் லிப் டு லிப் முத்தம் கொடுக்கும் காட்சியே என்று சொன்னார் (படத்தில் அப்படி ஒரு காட்சியே இல்லை).

இது கூட பரவாயில்லை. படம் ரிலீஸ் ஆன வெள்ளியன்று மதியமே படம் புட்டுகிச்சு என்கிற விஷயம் ஊரெல்லாம் பரவ, மனுஷன் கொஞ்சமும் சளைக்காமல் "இந்த படத்தின் வில்லனுக்கும் கிரண் ரெட்டிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, விஷமிகள் சில அப்படி பிரச்சாரம் செய்கிறார்கள்" என்று இவரே கிளப்பிவிட்டு விளம்பரம் தேடப்பார்த்தார். அப்படியும்கூட இந்த படத்தை யாரும் சீண்டவில்லை.

படத்தின் + கள்: எதுவுமே இல்லை. (அப்படியே சொல்லவேண்டுமென்றால் ஓரிரு பாடல்களை சொல்லலாம்)

படத்தின் - கள்: எல்லாமுமே.

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை: 0/6/ இந்த படத்திற்க்கெல்லாம் தோட்டாக்களை வீணடிக்க விரும்பவில்லை.

கிங்'ஸ் பன்ச்: நகரம் தூங்கும் வேளை - திரைக்கதையும் தூங்கிவிட்டது.

Sunday, June 26, 2011

பிள்ளையார் தெரு கடைசி வீடு–திரைவிமர்சனம்:24-06-2011

இந்த படத்தின் விமர்சன பதிவை படிக்கும் முன்பு இதனைப்பற்றிய அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய நம்முடைய முன்னோட்ட பதிவை ஒரு முறை பார்க்கவும்.பிறகு இந்த பதிவை புரிந்து கொள்வது சுலபமாகிவிடும். குறிப்பாக படத்தின் பின்னணி மற்றும் எதிர்ப்பார்ப்பு பற்றி தெரிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.

சூப்பர் குட் பில்ம்ஸ் படக்கம்பெனியின் உரிமையாளர் R.B.சௌத்ரியின் மூத்த மகன் ரமேஷ் (கோ பட ஹீரோ ஜீவா'வின் அண்ணன்). ஜித்தன் படத்தின் மூலம் அறிமுகம் ஆகி 'ஜித்தன்' ரமேஷ் என்று அழைக்கப்பட்டார். அதன் பிறகு அறிமுகமான இரண்டு ஆண்டுகளிலேயே ஆறு படங்களில் தொடர்ந்து நடித்தார். அவற்றின் ஓட்டம், ‘ஓட்டம்’ கண்டதால் கடந்த நான்கு ஆண்டுகளாக படங்கள் ஏதும் இல்லாமல் அமைதியாக இருந்தார். இப்போது அவரின் படம் பிள்ளையார் தெரு கடைசி வீடு ரிலீஸ் ஆகி இருக்கிறது. நான்கு ஆண்டுகளாக படம் எதனையும் ஒப்புக்கொள்ளாத  ரமேஷ் இந்த படத்தில் நடித்திருப்பது பலருக்கு ஆச்சர்யத்தை தந்தாலும், ஒருவிதமான எதிர்ப்பார்ப்பையும் உருவாக்கி இருந்ததை மறுக்க முடியாது. ஆந்திராவின் சிறந்த கதை சொல்லியாகிய எழுத்தாளர் பி.வி.எஸ்.ரவியிடமிருந்து தமிழுக்கு முதல் முறையாக இயக்க வந்திருக்கும் கிஷோரை பற்றியும் ஒரு விதமான கேள்விக்குறி இருந்தது. இத்தகைய எதிர்ப்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்கிறதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளவும்.

பிள்ளையார் தெரு கடைசி வீடு கதை: எண்பதுகளில் வந்த குடும்ப கதை பார்முலா தான் இந்த படத்தின் ஆரம்ப ஒரு மணி நேர கதை. வேலை வெட்டி இல்லாமல் நான்கு நண்பர்களுடன் சுற்றும் ஹீரோ, நகரத்தில் கல்லூரியில் படிக்கும் (எப்போதும் அவனை திட்டிக்கொண்டே இருக்கும்) அவனது தங்கை, மகன் செய்யும் தவறுகளை எப்போதும் மன்னிக்கும் அன்பு மிகுந்த தாய் (துளசி மேடம் இவ்வளவு நாள் எங்கே இருந்தீர்கள்?), கண்டிப்பான ஆனால் மகன் மீது மிகுந்த பாசம் கொண்ட அப்பா (ஜெயப்பிரகாஷ்), வெகுளியான மாமா என்று ஒரு அக்மார்க் தமிழ் கிராம குடும்பம். இவர்கள் வசிப்பது பிள்ளையார் தெருவின் கடைசி வீட்டில். இதை தவிர ஜெயப்பிரகாஷின் தங்கையை மணந்து கொண்ட பொறுப்பில்லாத குடிகார தந்தையாக இளவரசு, அவரது மகளாகிய வள்ளி (ஹீரோவுக்கு முறைப்பெண்-திரையில் தோன்றும்போதெல்லாம் பாவாடை தாவணியுடன் சேலை கட்டிக்கொண்டு இருக்கும்படியே அறிமுக காட்சிகள் - இரண்டு முறை) என்று தனி டிராக் வேறு.

இப்படி அமைதியாக செல்லும் கதையில் கல்லூரி விடுமுறைக்காக தங்கையின் தோழி (சஞ்சிதா படுகோனே) ஊரில் வந்து தங்க, அப்போதில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. தமிழ் சினிமா இலக்கணப்படி அவரிடம் காதல் கொள்கிறார் ஹீரோ. அதே சமயம் இளவரசு தன்னுடைய கடன்களை கட்டிய போஸ் வெங்கட்டுக்கு தன்னுடைய மகளை திருமணம் செய்ய முடிவெடுக்க, (ஜித்தன் ரமேஷை கேட்காமலேயே) தன்னுடைய தங்கை மகளை மருமகளாக்க முடிவெடுக்கிறார் ஜெயப்பிரகாஷ். தந்தை சொல்லை தட்டவும் இயலாமல், தன்னுடைய காதலை சொல்லவும் இயலாமல் தவிக்கும் ரமேஷ், திருமண நாளன்று திடீரென்று சஞ்சிதாவையே திருமணம் செய்துக்கொண்டு வந்து அனைவரையும் திகைக்க வைக்கிறார். ஆனால் அவர் திருமணம் செய்துக்கொண்டது வெறும் காதலுக்காக மட்டும் அல்ல என்பதே கதையை தூக்கி நிறுத்தும் ட்விஸ்ட். அது என்ன ட்விஸ்ட் என்பதை தயவு செய்து வெள்ளித்திரையில் கண்டு ஒரு நல்ல முயற்சியை ஊக்கப்படுத்துங்கள்.

படம் எப்படி?: கதையின் தலைப்புக்கும் படத்திற்கும் முக்கியமான தொடர்பு இல்லையென்றாலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் வந்த படங்களிலேயே வித்தியாசமான தலைப்பை கொண்டது இந்த படமே என்பதை மறுக்கவியலாது. முதல் ஒரு மணி நேரம் வழக்கமான தமிழ் படம் தான். ஹீரோ எதற்க்காக டி.ராஜேந்தரின் விசிறி ஆக வருகிறார் என்பது கதைக்கு சம்பந்தம் இல்லையென்றாலும் ஓரிரு காட்சிகளை நகர்த்த உதவுகிறது. நண்பர்கள் காமெடி, படத்தின் ஆரம்ப காட்சி, ஹீரோ வருகை, நாயகியை சந்திப்பது, காதலை சொல்ல முயலும் காட்சிகள் என்று தொடர்ந்து பல காட்சிகள்  மொக்கை என்றாலும் விறுவிறுப்பான இரண்டாம் பகுதி காரணமாக இவற்றை மன்னிக்கலாம். இதற்காக இதனை வழக்கமான தமிழ் படம் என்றெண்ணி விடாதீர்கள்.

இயக்கம் - இயக்குனர்: சமீபத்தில் வேறு எந்த ஒரு முதல்பட இயக்குனரும் தமிழில் இந்த அளவுக்கு வலுவான கதையையும், புத்திசாலித்தனமான திரைக்கதையையும் திரையில் கொண்டு வரவில்லை என்பதே உண்மை (தயவு செய்து 95 சதவீதம் ஸ்பானிய படங்களை காப்பி அடித்து எடுத்த படங்களை எல்லாம் பின்னூட்டத்தில் வந்து சொல்லவேண்டாம்). இதோ இந்த காட்சியில் ஒரு காதல் பாட்டு வரும் என்று அடித்து சொல்லும் ரசிகர்களை எல்லாம் தவிக்க விட்டு அங்கே பாடல்களை வைக்காமல் தவிர்த்து இருக்கிறார் கிஷோர். அதே போல மூன்றாவது தடவையாக ஹீரோ ஒரு தனி பாடலை பாடுகையில், 'அய்யோ' என்று எண்ணிக்கொண்டே இருக்கையில் அந்த பாடலை ஒரே ஒரு சரணத்துடன் முடித்துவிட்டு மறுபடியும் நம்மை திகைக்க வைக்கிறார். குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சிகளில் ஒரு ட்விஸ்டில் மற்றுமொரு ட்விஸ்ட்டை புகுத்தி எதிர்பாராத ஒரு முடிவை நோக்கி திரைக்கதையை நகர வைக்கும்போது கிஷோரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

நடிகர்கள் - ஜித்தன் ரமேஷ்: கண்டிப்பாக இந்த படம் இவரது வாழ்வில் ஒரு மிக முக்கியமான திருப்புமுனை. ஜீவாவிற்கு எப்படி ராம் திருப்புமுனையாக அமைந்ததோ, இந்த படம் அதைவிட சிறந்த திருப்புமுனையாக ரமேஷிற்கு அமையும். முதல் பாதியில் நடன காட்சிகளில் திறமையை அற்புதமாக வெளிப்படுத்திய இவர், கடைசி நாற்பது நிமிடங்களில் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைக்கிறார். இந்த பதிவின் ஆரம்பத்தில் ஜீவா'வின் அண்ணன் என்று எழுதி இருப்போம். இதே போல நல்ல இயக்குனரும், சிறந்த திரைக்கதையும் கொண்டால், விரைவில் ஜீவா'வை ரமேஷின் தம்பி என்று எழுத வேண்டிய சூழல் வரும்.

ரமேஷிற்கு அவருடைய குரல் ஒரு தடையே என்றாலும் இந்த படத்தில் முடிந்த வரையில் அவர் முயற்சி எடுத்து மாறுபடுத்த முயன்றுள்ளார். இருந்தாலும் மைக் மோகன் போல இவரும் ஒரு டப்பிங் குரலை தேர்ந்தெடுத்தல் நலம். கிளைமேக்சில் அந்த மழை பெய்யும் காட்சியில் உண்மையில் ரமேஷ் நடித்துள்ளார். ஹாட்ஸ்  ஆப் டு யு, ரமேஷ். அதுவும் இந்த அளவுக்கு ஒரு கட்டுபடுத்தப்பட்ட (ரெஸ்டிரெயின் ஆன) நடிப்பை சமீபத்தில் வேறெந்த தமிழ் நடிகரிடமும் காணவில்லை எனதே உண்மை. கண்டிப்பாக இந்த படத்திற்காக அவர் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

ஹீரோயின் - சஞ்சிதா படுகோனே: வேட்டைக்காரன் படத்தில் விஜய்'யின் தங்கையாக வருவாரே, அவர்தான் இவர். இந்த படத்தில் இவர் ஆரம்பத்தில் மொக்கையாக தெரிந்தாலும் படம் முன்னேற முன்னேற, தன்னுடைய நடிப்பிலும் முன்னேற்றத்தை காண்பித்துள்ளார், குறிப்பாக ரமேஷிடம் தன்னுடைய காதலை ஒப்புக் கொள்ளும்போதும்,  கிளைமேக்சிலும் இவரது நடிப்பு அற்புதம். இந்த படம் இவருக்கு ஒரு முக்கியமான மைல்கல். ஆனால் அநேகமாக தமிழ் சினிமா இலக்கணப்படி இனிமேல் இவர் ஹீரோவின் தங்கையாகவோ, மாமனை கட்டிக்கொள்ள ஆசைப்படும் இரண்டாவது முறைப்பெண் ஆகவோ கூட மாறக்கூடும்.

மற்ற பாத்திரங்கள்: இதனை தவிர, ஜெயப்பிரகாஷ் தன்னுடைய டிரேட்மார்க் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சமீப காலங்களில் நான் இவரின் மிகப்பெரிய விசிறி ஆக மாறிவருகிறேன் என்பதை மறுக்கவியலாது. அதே சமயம் இவரை தொடர்ந்து ஒரே மாதிரி வேடங்களில் பார்ப்பதும் சலிப்பையே அளிக்கிறது. மாற்றிக்கொள்ளுங்கள் சார், இல்லையென்றால் உங்களை இதே மாதிரி பாத்திரங்களுக்கு டைப்காஸ்ட் செய்துவிடப்போகிறார்கள். திருடா, திருடி படம் வந்தபோது மாணிக்க விநாயகம் அவர்களுக்கும் இதே மாதிரி வரவேற்ப்பு இருந்தது. ஆனால் அவர் இப்போது எங்கே என்று யோசித்துப்பாருங்கள்.

ஹீரோவின் தங்கையாக வரும் அகிலாவும், ஹீரோவின் அம்மாவாக வரும் துளசியும் ஆரம்ப காட்சிகளில் வழக்கமாக தெரிந்தாலும் படத்தின் கிளைமேக்சில் அட்டகாசமாக ஸ்கோர் செய்கிறார்கள். அந்த நாற்பது நிமிடமும் படத்தின் உச்சகட்டம். பிரகாஷ் ராஜ் ஒரே ஒரு நாள் மட்டும் கால்ஷீட் கொடுத்தாரா என்ன என்பது தெரியவில்லை. ஆனால் அவர் வரும் அந்த இரண்டு காட்சிகளும் படத்தின் திருப்புமுனை. தயவு செய்து இதுபோன்ற பாலிஷ் ஆன பாத்திரங்களிலேயே நடியுங்கள் பிரகாஷ், உங்களது வில்லன் நடிப்பு எல்லாம் வேண்டாம்.

ஹீரோவின் நண்பராக வரும் சூரி, வழக்கமான நண்பன் பாத்திரம்தான் என்றாலும் கடைசி இரண்டு காட்சிகளில் தன்னால் நடிக்க இயலும் என்பதை நிரூபித்து உள்ளார். அதைப்போலவேதான் அவரது நண்பர் மாரியும். அதுவும் கிளைமேக்சில் மாரி ஆட்டம் போடுவது கொஞ்சம் ஓவர்தான் என்றாலும் கதையுடன் ஒன்றியிருப்பதே அதன் சிறப்பு. ஆனால் இவர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் விதத்தில் வருகிறார் இளவரசு. அலட்டல் இல்லாமல் அறிமுக காட்சியில் சிக்ஸ் அடிப்பதில் இருந்து வரும் காட்சிகளில் எல்லாம் கைதட்டல் வாங்குகிறார். கொஞ்சமே வந்தாலும் பின்னுகிறார்.

படத்தின் + கள்:

  • எங்கேயும் திருடாத நேர்மையான கதை
  • எதிர்ப்பார்ப்பை தோற்கடிக்கும் காட்சிகளும், திருப்பங்களும்
  • சிறந்த திரைக்கதை
  • இரண்டாம் பகுதியில் நல்ல இயக்கம்
  • மிகையில்லாத நடிப்பு
  • கடைசி நாற்பது நிமிடங்கள்

படத்தின் - கள்:

  • தேவையில்லாத அந்த ஒரு ஹீரோயிச சண்டைக்காட்சி
  • எண்பதுகளின் தமிழ் படங்களை நினைவுபடுத்தும் கதையோட்டம்
  • மெதுவாக நகரும் முதல் பகுதி
  • கவனத்தை கவராத இசை

திருஷ்டி போட்டு: படத்தில் பல விஷயங்கள் கவர்ந்தாலும் ஒரே ஒரு விஷயம் மட்டுமே உறுத்திக்கொண்டு இருந்தது. படத்தின் ஒரு காட்சியில் ஹீரோயின் வீதியில் நின்றுக்கொண்டு இருக்கும்போது சில பல ரவுடிகள் வந்து கிண்டல் செய்ய, அதில் ஒருவன் அவரது பின்பக்கத்தை தட்டிவிடுகிறான். அதானால் கோபமடைந்த ஹீரோ அவனது கையை உடைத்து விடுகிறார். இதில் தவறு எதுவும் இல்லையென்றாலும், அவன் தடவியது இடது கையால், ஹீரோ உடைத்தது வலது கையை.

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை: 3 bullets 3/6. மூன்று தோட்டாக்கள்.

கிங்'ஸ் பன்ச்: பிள்ளையார் தெரு கடைசி வீடு – குடியிருக்கலாம்.

Saturday, June 25, 2011

நூற்றென்பது (180) : 25th JUNE, 2011 - திரைவிமர்சனம்!

வணக்கம்,

1989ல் இதயத்தை திருடாதே என்றொரு படம் வந்தது! ஹீரோவுக்கு கான்சர்! ஹீரோயினுக்கு இதயத்தில் ஓட்டை! ஆனால் படத்தில் புதுமை என்னவென்றால் வழக்கம் போல சோகத்தை பிழியாமல் இருக்கும் வரை சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியதேயாகும்!

புதுமையான மாற்றுக் கருத்தை வெளிப்படுத்திய இப்படம் தெலுங்கு டப்பிங் என்றாலும் தமிழிலும் சூப்பர் டூப்பர் ஹிட்! ஒலக சினிமா எடுக்காத அந்த கால மணிரத்னம், எவர்க்ரீன் இசைஞானி இளையராஜா, இருட்டிலும் தெளிவாக படம்பிடித்த பி.சி.ஸ்ரீராம் என்ற அற்புதமான கூட்டணி எப்போதும் சோடை போனதேயில்லை!

இன்று ரிலீஸாகியுள்ள 180 படமும் இதே கருத்தை முன்வைக்க முயல்கிறது! ஆனால்...?!!

கதை: ஹீரோ சித்தார்த்துக்கு கனையத்தில் கான்சர் (தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக ஹீரோவுக்கு இங்கு கான்சர் வருகிறது)! ஆறு மாதத்தில் (180 நாட்கள் - படத்தின் டைட்டில்) அவர் இறந்து விடுவாராம் (இந்த கால அவகாசத்தை மாத்தவே மாட்டாங்களா?!!) ஆகையால் அவர் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பாமல் தன் கடைசி காலத்தை தனிமையில் சந்தோஷமாக கழிக்க விரும்புகிறார்!

ஆனால் படம் ஆரம்பித்து அரை மணி நேரத்திலேயே 180 நாட்கள் முடிந்தும் உயிரோடு இருந்து நம்மையெல்லாம் படுத்துகிறார்! நடுவில் இரண்டு ஹீரோயின்களுடன் டூயட் பாடுகிறார்! சமூக சேவையெல்லாம் வேறு செய்கிறார்! க்ளைமாக்ஸ் எப்போதுதான் வருமென்று நம் பொறுமையையும் சோதிக்கிறார்! 

கடைசியில் சித்தார்த் பிரேசிலுக்கு செல்வது போலெல்லாம் காட்டி 180 - பாகம் 2 வரும் என்றெல்லாம் பயமுறுத்துகிறார்கள்!

நடிப்பு: சித்தார்த் வழக்கம் போல வந்து போகிறார்! 2 ஹீரோயின்கள்! நித்யா மேனன், ப்ரியா ஆனந்த்! நித்யா சேச்சி ஓடி வரும் போதெல்லாம் அவரோடு சேர்ந்து தியேட்டரும் குலுங்குகிறது! ப்ரியாவை சித்தார்த் அவ்வப்போது மவுத் கிஸ் அடித்து சூட்டைக் கிளப்புகிறார்! இது ஒரு BI-LINGUAL படம் என்பதால் தமிழ் மெளலியும், தெலுங்கு தணிகெல்லா பரணியும் வருகிறார்கள்!

இசை: பாடல்கள் எதுவும் காதிலும், மனதிலும் பதியவில்லை என்பது பெரும் குறை! பலகீனமான கதை/திரைக்கதைக்கு பலம் சேர்க்க வேண்டிய இசை சொதப்பினால் படம் படுத்து விடாதோ?!! எங்கேயும் காதல் படம் பல இடங்களில் படு மொக்கையென்றாலும் பாடல்கள் மூலம் அந்த குறை நிவர்த்தி செய்யப்பட்டது நினைவிருக்கலாம்!

ஒளிப்பதிவு: படத்தின் ஹை-லைட் இதுதான்! ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம் சூப்பர் ஸ்லோ-மோஷன் காட்சிகளில் புகுந்து விளையாடியிருக்கிறார்! அழகிய தமிழ் மகன் படத்தில் இளைய தளபதி மருத்துவர் விஜய்யை அவ்வளவு அழகாக காட்டியவராயிற்றே! சோடை போவாரா?!!

தியேட்டர் டைம்ஸ்:
  • படம் பார்த்த அனைவரும் இரண்டாம் பாதியில் மொக்கை தாள முடியாமல் கதறிக் கொண்டிருக்க அண்ணன் ‘க’னா அவர்கள் மட்டும் சில பல குறியீடுகளைக் கண்டு பிடித்துக் கூறி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது கொடுமையிலும் கொடுமை!
  • படத்தில் நித்யா மேனன் சித்தார்த்தை படத்துக்கு போகலாம் என்று அழைக்கும் போது “தயவு செய்து 180க்கு மட்டும் போயிடாதீங்க!” என்ற கூக்குரல் அண்ணன் ‘க’னாவிடமிருந்து எழுந்தது!
  • படத்தை தயாரித்தது சத்யம் நிறுவனம் என்ற போதிலும் இதுவரை அவர்கள் ப்ரிவியூ ஷோ எதுவும் போடவில்லை! இன்று மாலை ராயப்பேட்டை ரியல் இமேஜில் ஸ்பெஷல் ஷோ மட்டும் இருந்தது! படம் மொக்கைன்னு அவங்களுக்கு முன்னமே தெரிஞ்சிருக்குமோ?!!
நிறைகள்: 
  • ஒளிப்பதிவு!
குறைகள்: 
  • வழக்கமான கதை! மொக்கைத் திரைக்கதை! ஆமை வேகத்தில் நகரும் இரண்டாம் பாகம்!
  • இசை!
  • ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் ரசனைகளை மட்டுமே திருப்திப் படுத்தும் வகையில் அமைந்திருக்கும் முதல் பாதி காட்சிகள்!
தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:

1/6 - ஒரே ஒரு தோட்டா!

பயங்கரவாதியின் பன்ச்: 180 - 180 ரூவா போச்சே!

ட்ரைலர்:

உதயன் - திரைப்பட விமர்சனம் 24-06-2011

இந்த படத்தின் விமர்சன பதிவை படிக்கும் முன்பு இதனைப்பற்றிய அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய நம்முடைய முன்னோட்ட பதிவை ஒரு முறை பார்க்கவும்.பிறகு இந்த பதிவை புரிவது சுலபமாகிவிடும். குறிப்பாக படத்தின் பின்னணி மற்றும் எதிர்ப்பார்ப்பு பற்றி தெரிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.

கொஞ்ச நாளாக இருந்த தேக்க நிலை மாறி, இந்த வாரம் மூன்று புத்தம் புதிய தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகின்றது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் மூன்று படங்களுமே அறிமுக இயக்குனர்களால் இயக்கப்பட்டவை எனபதே. இன்று ரிலீஸ் ஆகிய பிள்ளையார் தெரு கடைசி வீடு படமும், உதயன் படமும் வெளியான அனைத்து இடங்களிலுமே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் அருள்நிதி 'நடிப்பில்' வெளிவந்த உதயன் படத்தினை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

உதயன் - படத்தின் கதை: சென்னையில் ஒரு தனியார் வங்கியில் பணிபுரியும் அருள்நிதி (வசந்த்), எதேச்சையாக ஒருநாள் ப்ரனீதாவை சந்தித்து உடனடியாக திருமணம் பற்றி பேசி, அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார். பின்னர் தோழியின் வங்கி கடனுக்காக ப்ரியாவும் வசந்திடம் வந்து உதவி கேட்க, மோதலில் ஆரம்பித்தது சிறிய ஊடல்களுக்கிடையே காதலாக மாறுகிறது. ப்ரியாவின் தந்தை ஒரு பெரிய சக்தியின் ஆடிட்டராக பணிபுரிபவர். இந்த காதலை இவர் எதிர்க்க, வசனத்தை மிரட்ட வரும் அந்த பெரிய தாதாவின் தம்பி வசந்த்தை கண்டவுடன் மிரண்டு போய், வசந்த்தை கத்தியால் குத்திவிட, அப்போது எங்கே வந்து அவனை கொன்றுவிடுகிறார் ஆஷிஷ் வித்யார்த்தி. அவரை பார்த்தவுடன் வசந்த் "அப்பா" என்று கூறியபடி சரிய, இடைவேளை ஆரம்பிக்கிறது. வசந்த் யார்? அவனுக்கும் அந்த பெரிய சக்திக்கும் என்ன பிரச்சினை? எதற்க்காக வசந்தின் அப்பா அவர்களை தேடி வருகிறார்? இந்த காதல் ஜோடிகள் கை கோர்த்தார்களா? என்பதை உண்மையிலே தைரியம் இருந்தால் வெள்ளி திரையில் காண்க.

அருள்நிதி: சில பேர் நேரில் பார்க்க அழகாக இருப்பார்கள்; ஆனால் போட்டோவில் அவர்களை காண சகிக்காது. அதே சமயம் சிலர் போட்டோவில் நன்றாக இருப்பார்கள், ஆனால் நேரில் பார்த்தல் அவர இவர்? என்று வினவும்படி இருப்பார்கள். நம்ம ஹீரோ அருள்நிதி போட்டோக்களில் பார்க்கையில் ஹான்ட்சம் ஆகவே இருக்கிறார். ஆனால் படத்தில் பார்க்கையில் ஒருவிதமான (கஷ்டப்படுகிற) உடல்மொழியுடனே (பாடி லாங்குவேஜ்) இருப்பதை உணர முடிகிறது. உதாரணமாக அவரது கைகளை எப்படி பொசிஷனில் வைப்பது என்பதே அவருக்கு இன்னமும் கைவராத கலை. அதன் பின்னர் அவரது குரல். ஜித்தன் ரமேஷைவிட ஜீரணிக்க கடினமாக இருக்கும் ஹீரோவின் குரல் யாருடையது என்றால், வெகு சுலபமாக அருள்நிதியின் குரலே என்று சொல்லிவிடலாம். கண்டிப்பாக ஒரு டப்பிங் குரல் இவருக்கு தேவை. அதே போல இவருடைய உடல் அமைப்பே படங்களில் ஒருவிதமாக Ungainly ஆக இருக்கிறது. ஆனால் போட்டோக்களில் பார்க்கையில் உயரமான பில்லா அஜித்தை போல ஸ்மார்ட் ஆக இருக்கிறார்.

ஆரம்ப காலங்களில் அமிதாப் பச்ச்னைப்பற்றி கூறுகையில் "He’s got 2 Left Shoes" என்று கூறுவார்கள். அதாவது அவருக்கு நடனம் ஆட வராது என்பதையே அப்படி கிண்டலாக சொல்லி வந்தார்கள். பின்னர் அவர் படிப்படியாக முன்னேறி இப்போது தனக்கென ஒரு தனி பாணியை வகுத்துக்கொண்டு ஒரு அட்டகாசமான நடனம் புரிபவராக மாறிவிட்டார். ஆனால் அருள்நிதி இப்போதும் 2 Left shoes உடனே இருக்கிறார். கண்டிப்பாக இவருக்கு ஒரு நடன பயிற்சியாளர் தேவை. அதே சமயம் முகத்தில் ஒரு Dead-Pan expression எப்போதும் இருக்கிறது. யாராவது வந்து ஒரு சோகமான செய்தியை சொன்னால் கூட " என்ன, இன்னைக்கு வெள்ளிகிழமையா?" என்று விசாரிப்பதைப்போலவே அவரது முகபாவனைகள் உள்ளன.

என்னடா இவன் தொடர்ந்து ஒரே நெகடிவ் விஷயங்களையே சொல்கிறான் என்று யோசிக்காதீர்கள். அருள்நிதியிடம் ஹீரோக்களுக்கான பல நல்ல குணாதிசயங்கள் உள்ளன. அவரது உயரம் ஒரு மிகப்பெரிய பிளஸ் பாயின்ட். சண்டை காட்சிகளில் அனாயசமாக ஐந்து பேரை அடிக்கிறார் (ஆரம்ப கால -திமிரு பட-விஷால் போல). ஸ்மார்ட் ஆக தெரிகிறார். ஒரு நல்ல ஆளுமை இவரிடம் இருக்கிறது. கொஞ்சம் ஹோம்வர்க் செய்தால் கண்டிப்பாக ஒரு பெரிய ரவுண்ட் வருவார்.

பிரனீதா: இந்த படம் பார்க்க சென்றதின் முதல் நோக்கமே இவரை மறுபடியும் திரையில் பார்க்கவேண்டும் என்றா ஆசைதான். சென்ற தீபாவளிக்கு பிறகு ரிலீஸ் ஆன பாவா என்கிற தெலுகு படத்தில்தான் இந்த அழகியை நான் முதலில் பார்த்தேன். நல்ல முகபாவங்கள், நேர்த்தியான முகம், ஒல்லியான உடல்வாகு என்று செம கியூட்டாக தெரிந்தார் இவர். ஒரு துறுதுறுப்பான கல்லூரி பெண் பாத்திரத்தில் நன்றாக நடித்து இருந்தார். ஆகையால் இந்த படத்தில் இவரை பார்க்கவே சென்றேன். இந்த படத்தில் இவரை பார்க்கையில் நடிப்புக்கும் இவருக்கும் கொஞ்சம் தூரம் என்றே தோன்றுகிறது. ஒல்லியான பெண்கள் தமிழில் நிலைப்பது அரிதே. ஆனால் இவர் திறமையான ஒரு நடிகை. அதே சமயம் 'தெறம' காட்டும் நடிகையும் கூட. பார்க்கலாம்.

சந்தானத்தின் இரட்டை அர்த்தம் நேரிடையான அர்த்தம் கொண்ட காமெடியும், இரண்டு இளமை ததும்பும் பாடல்களும் இல்லை என்றால் தியேட்டரில் இருந்து மனம் நொந்து வந்திருப்பேன். இடைவேளைக்கு பிறகு எதாவது வித்தியாசமாக இருக்கும் என்றால், இதுவரை இரண்டாயிரம் தடவை தெலுகு படங்களில் வந்துள்ள அதே பழிவாங்கும் கதை தான். ஆனால் வில்லனுக்கும் உதயனுக்கும் சண்டை ஏற்படும் காட்சியில் நியாயம் என்னவோ வில்லன் பக்கமே இருக்கிறது. பின்னே என்னங்க, வில்லன் காரில் வந்துக்கொண்டு இருக்கும்போது உதயன் அவரின் காருக்கு முன்னே செல் போனில் பேசிக்கொண்டே வழிவிடாமல் தொடர்ந்து இருசக்கர வாகனத்தை ஒட்டிக்கொண்டு செல்கிறார். ஒரு கட்டத்திற்கு பிறகு கடுப்பாகும் வில்லன் அவரின் வண்டியை ஒரு தட்டு தட்ட, உதயன் கீழே சேற்றில் விழுந்து விடுகிறார். அப்போதும்கூட வில்லன் நல்லதொரு அறிவுரையை மட்டுமே கூறுகிறார் (வண்டி ஓட்டும்போது செல் போனில் பேசவேண்டாம், கூப்பிடுவது எமனாக கூட இருக்கலாம்). ஆனால் உதயன் அவரை துரத்தி சென்று அடித்து, சட்டையை கழட்டி ஊரெல்லாம் நடத்தி சென்று அவமானப்படுத்துகிறார். பின்னர் இவர்களுக்குள் பகை ஆரம்பிக்கிறது. இதில் உதயன் செய்ததே தப்பு என்று படுகிறது.

படத்தின் + கள்:
சந்தானம் + காமெடி
புதிய ஹீரோயின்
இரண்டு பாடல்கள்
சற்றே புத்திசாலித்தனமான வசனங்கள்
இடைவேளை ட்விஸ்ட்
கிளைமேக்ஸ் சண்டையில் திருப்பம்


படத்தின் - கள்:
நடிப்பு ?
மிகவும் பழக்கப்பட்ட திரைக்கதை, யூகிக்ககூடிய காட்சிகள்
இங்கே பாடல் வரும் என்று தெளிவாக அறியும் காட்சியமைப்பு
வித்தியாசம் இல்லாத காட்சிகள், கதையமைப்பு
இசை

இவ்வளவு எதுக்குங்க பாஸ், இரண்டு அருள்நிதி பாத்திரங்களுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் என்ன தெரியுமா? ஒருவர் விபூதி வைத்து இருப்பார், இன்னொருவர் வாயில் பீடா போட்டுக்கொண்டே இருப்பார். இதுக்கு மேல என்னங்க வேண்டும் உங்களுக்கு? எம்ஜியார் ஒரு மரு வச்சா, அது மாறுவேஷம் எண்ணும்போது, இந்த வித்தியாசம் போதாதா?

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை: single bullet 1/6 (ஒரே ஒரு தோட்டா).

கிங்'ஸ் பன்ச்: உதயன் - அஸ்தமனம் ஆகிவிட்டான்.

Friday, June 24, 2011

தியேட்டர் டைம்ஸ் 03 : 24th June 2011 அன்று வெளியாகும் படங்களின் முன்னோட்டம்

சென்ற வாரத்தை கம்பேர் செய்து பார்க்கும்போது இந்த வாரம் கொஞ்சம் பரவாயில்லைதான். ஏனென்றால் மொத்தம் மூன்று தமிழ் படங்களும் ஒரு தெலுகு படமும் ரிலீஸ் ஆகிறது. சமீப காலமாக இருந்த ஒரு வித தேக்க நிலை மாறி, படங்கள் வரிசையாக ரிலீஸ் ஆவது பட ரசிகர்களுக்கும் தியட்டர் உரிமையாளர்களுக்கும், ஏன் ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகிற்கே நல்லது. இந்த டிரென்ட் தொடரும் என்ற நம்பிக்கையில் இந்த வாரம் வரப்போகும் படங்களை பற்றிய முன்னோட்டப்பதிவிற்கு செல்வோம்.

01 அருள்நிதி நடிக்கும் உதயன்; படத்தின் இயக்குனராகிய சாப்ளின் தரணி, கரு பழனியப்பன் மற்றும் பாண்டிராஜ் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். பாண்டிராஜின் வம்சம் படத்தில் பணி புரியும்போது அருள்நிதியிடம் சொன்ன கதையே இந்த உதயன். இந்த படத்தின் தயாரிப்பாளரை குறித்து சமீபத்தில் கிளம்பிய சர்ச்சை இன்னமும் அடங்கவில்லை. பொங்கல் அன்று பூஜை போடப்பட்ட இந்த படம் மிகவும் குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்டு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. த்ரில்லர் வகையை சேர்ந்த படம் இது என்று இயக்குனரே கூறும்போது நாமென்ன மறுக்கவா போகிறோம்?

Udhayan Poster

இயக்குனர்                        : சாப்ளின் (முதல் படம்)
நடிகர்கள்                           : அருள் நிதி (இரட்டை வேடங்களில்), பிரனீதா (தமிழில் அறிமுகம்)
ஒளி ஓவியர்                    : விஜய் மில்டன்
இசையமைப்பாளர்          : மணிகண்டன் கதிரி (முதல் படம்-கதிரி கோபால்நாத் புதல்வர்)
தயாரிப்பாளர்                    : பிரபாகரன்
மொழி                                : தமிழ்


என்ன மேட்டர் படத்துல:முதல் முறையாக அருள்நிதி இரட்டை வேடங்களில் நடிக்கிறார் (கொய்யால, நடிச்சதே ஒரே ஒரு படம்; ரெண்டாவது படத்துல டபுள் ஏக்டிங் என்று சொல்வதை விட்டு விட்டு இப்படியா என்று கேட்கவேண்டாம்). வழக்கம்போல எல்லா ஹீரோக்களும் சொல்வதையே இவரும்  சொல்கிறார்:இரண்டு பாத்திரங்களுக்கும் இடையே வித்தியாசம் காட்டியுள்ளேன் என்று. ஹீரோயின் ஒரு அழகு பதுமை. இவர் இந்த ஆண்டு வெளிவந்த சித்தார்த்தின் தெலுகு படத்தில் நடித்து மனதை கொள்ளை கொண்டவர். செம கியூட்டான இந்த ஹீரோயினை ஒரு கன்னட பட பாடலில் பார்த்து இம்ப்ரெஸ் ஆகி தமிழில் புக் செய்துள்ளனர். நடிக்க வருகிறதா என்று பார்க்கவேண்டும்.

 

02 ஜித்தன் ரமேஷின் பிள்ளையார் தெரு கடைசி வீடு: கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கழித்து ஜித்தன் ரமேஷ் நடித்து வரும் முதல் படம் இது. நடிக்க வந்த முதல் இரண்டு ஆண்டுகளிலேயே ஆறு படங்களில் நடித்தவர், புலி வருது படத்திற்கு பின்பு காணாமலே போய்விட்டார். படத்தின் இயக்குனர் 'திருமலை' கிஷோர். ஆந்திராவின் வெற்றிகரமான எழுத்தாளர் பி.வி.எஸ்.ரவியிடமிருந்து தமிழுக்கு முதல் முறையாக இயக்க வந்திருக்கும் இவருக்கும் விஜய் நடித்த திருமலை படத்திற்கும் சம்பந்தம் இல்லை. திருப்பதி இவரின் சொந்த ஊர். பெருமாளிடம் "முதல் படம் புக் ஆனால் உன் பெயரையே எனக்கு முன்னாள் வைத்துக்கொள்வேன்" என்று வேண்டிக்கொண்டதால் இப்படி.

PKKT Poster

இயக்குனர்                        : 'திருமலை' கிஷோர் (முதல் படம்)
நடிகர்கள்                           : ஜித்தன் ரமேஷ், சஞ்சிதா படுகோனே, சுகாசினி, பிரகாஷ்ராஜ், ஜெயபிரகாஷ்
ஒளி ஓவியர்                    : பன்னீர்செல்வம்
இசையமைப்பாளர்          : சக்ரி (முதல் படம்)
தயாரிப்பாளர்                    : சூப்பர் குட பில்ம்ஸ் R.B.சவுத்ரி
மொழி                                : தமிழ்


என்ன மேட்டர் படத்துல: விஜய டி.ராஜேந்தரின் பரம ரசிகனாக வரும் ரமேஷ், தங்கி இருக்கும் இடமே பிள்ளையார் தெரு கடைசி வீடு. தனக்கு மிகவும் பிடித்தமான சொர்க்கம் போன்ற அந்த வீட்டை, வீட்டில் உள்ளவர்களை காதலுக்காக பிரிந்து வாழுகிறார். அதன் பின்னணியை லிட்டர் லிட்டராக கண்ணீரை கொண்டு சொல்லும் கதையே இந்த படம்.  தன்னை அனைவரும் கிண்டல் செய்வதாக நினைக்கும் விஜய டி ராஜேந்தர், மிகுந்த கெடுபிடிக்கு பிறகே அவரது பெயரை உபயோகிக்க சம்மதித்தார். கடைசியில் படம் பார்த்தவர், ரமேஷ் கட்டிபிடித்து பாரட்டியதோடில்லாமல் தன்னுடைய அடுத்த படத்தில் ரமேஷையே ஹீரோவாக நடிக்கவும் வைத்துள்ளார். கிளைமேக்சில் ரமேஷ் 'உண்மையிலேயே' நடித்துள்ளதாக கோடம்பாக்கத்து பட்சி ஒன்று சொல்கிறது. பார்க்கலாம்.

 

03 சித்தார்த்தின் 180 நூற்றெண்பது: கடைசியாக சித்தார்த் நடித்து வந்த படம் நினைவிருக்கிறதா? ஏழு வருடங்களுக்கு முன்பு வந்த ஆயுத எழுத்து என்ற மொக்கை படமே அது. அதன் பிறகு இப்போதுதான் தமிழில் வருகிறார். அதுவும் இந்த படம் ஒரு இரு மொழி படம் (தமிழ் மற்றும் தெலுகு) என்பதாலேயே இந்த வருகை. இந்த படத்தை இயக்குபவர் பிரபல விளம்பர பட இயக்குனராகிய ஜெயேந்திரா. சுபாவுடன் இவரே கதையையும் எழுதி இருக்கிறார். சத்யம் சினிமாஸ் தயாரிக்கும் படம் என்பதால் விளம்பரங்கள் கலை கட்டுகிறது. முதலில் 180 என்று எண்ணால் மட்டுமே இருந்த படத்தின் தலைப்பு இந்த வாரம் நூற்றெண்பது என்று மாற்றப்பட்டு உள்ளது. ஆனால் தெலுகில் 180 என்றுதான் ரிலீஸ் ஆகிறது.

180 Poster

இயக்குனர்                        : ஜெயேந்திரா (முதல் படம்)
நடிகர்கள்                           : சித்தார்த், நித்யா மேனன், ப்ரியா ஆனந்த், மவுலி
ஒளி ஓவியர்                    : நம்ம பாலசுப்ரமணியம் (ரெட் ஒன் கேமராவுடன்)
இசையமைப்பாளர்          : மலையாள இசையமைப்பாளர் ஷரீத் (ஜூன் R பட இசையமைப்பாளர்)
தயாரிப்பாளர்                    : சத்யம் சினிமாஸ்
மொழி                                : கிட்டத்தட்ட தமிழ் & தெலுகு


என்ன மேட்டர் படத்துல: அடுத்த நூற்றெண்பது நாட்களில் இறந்துவிடுவோம் என்பதை தெரிந்துகொண்டு தன்னுடைய வாழ்க்கையில் அனைத்தையும் ரசிக்க ஆசைப்படும் ஒரு இளைஞனின் கதையே (ஐயையோ, அந்த 'இளைஞன்' இல்லீங்கோவ்) இந்த நூற்றெண்பது. இந்த படம் தமிழில் ஓடவே ஓடாது என்று (வழக்கம்போல) என்னுடைய நண்பரொருவர் என்னிடம் பந்தையம் கட்டியுள்ளார். பார்க்கலாம், இந்தமுறையாவது நான் ஜெயிக்கிறேனா என்று.

 

04 தெலுகு நகரம் நித்ர போதுன்ன வேல (நகரமே தூங்கும்போது): கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து ரிலீஸ் ஆகும் தெலுகு படம். மார்கெட் அவுட் ஆன சார்மியும், இழந்த நட்சத்திர அந்தஸ்தை பிடிக்க போராடும் ஜகபதி பாபுவும் ஜோடி சேர்ந்துள்ளனர். படத்தின் டிரைலரை பார்க்கும்போது ஒரு த்ரில்லர் படம் மாதிரியே தெரியவில்லை. ஏதோ தாதாகிரி படம் போலுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் பிரேம் ராஜ் அவர்களை ஜகபதி பாபு மிகவும் நம்புகிறார். தினசரியில் கொடுத்துள்ள விளம்பரத்தில் படத்தின் பெயரில் எழுத்துப்பிழை இருப்பதை திருத்தக்கூட நேரமில்லை வுட்லண்ட்ஸ் தியேட்டர் நிர்வாகத்தினருக்கு.

Nagaram Nidra Pothunna Vela

இயக்குனர்                        : பிரேம் ராஜ்
நடிகர்கள்                           : ஜகபதி பாபு, சார்மி, ஷாயாஜி ஷிண்டே,MS நாராயணா, பாபு மோகன்
இசையமைப்பாளர்          : யஷோ கிருஷ்ணா (யுவக்ருஷ்ணாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லீங்கோவ்)
தயாரிப்பாளர்                    : நந்தி ரெட்டி
மொழி                                : சுந்தர தெலுங்கு


என்ன மேட்டர் படத்துல: படத்தில் சார்மி பத்திரிக்கை ரிபோர்டராக வருகிறார். படத்தின் முக்கால்வாசி பகுதிகள் இரவிலேயே ஷூட்டிங் செய்யப்பட்டு இருக்கிறது. படத்தின் முக்கியமான விஷயம் என்ன என்று விசாரித்தால் தயாரிப்பாளர் கதையையோ, நடிப்பையோ சொல்லாமல் படத்தில் சார்மி ஜகபதி பாபுவுக்கு கொடுத்த ஒரு முழு நீல நீள லிப் டு லிப் முத்தத்தையே சொல்கிறார். அதை நம்பியே எங்கள் குரூப்பில் பலரும் இந்த படத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

 

05 ஹிந்தி காமெடி படம் டபுள் தமால்: தொண்ணூறுகளில் தில், பேடா, இஷ்க் என்று தொடர்ந்து இளவயது ரசிகர்களுக்கு வெள்ளிவிழா படங்களாக வழங்கியவர் இந்திர குமார். ஆனால் அடுத்த பத்தாண்டுகளில் அவர் இயக்கிய படங்கள் எதுவுமே ஹிட் ஆகவில்லை. ஓரளவுக்கு சுமாராக போன படமே தமால். நான்கு வருடங்களுக்கு பிறகு அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வந்திருக்கிறார் இந்திர குமார். இந்த படமாவது அவருக்கு கடந்த பனிரெண்டு ஆண்டுகளாக தேடிக்கொண்டு இருக்கும் சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்து அவருக்கும் ஆமிர் கானுக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பை போக்க உதவுகிறதா என்று பார்க்கலாம்.

Doubls Dhamaal Poster

இயக்குனர்                        : இந்திர குமார்
நடிகர்கள்                           : சஞ்சய் தத், அர்ஷத் வார்சி, ரிதேஷ் ஜெனிலியா தேஷ்முக், மல்லிகா ஷெராவத், கங்கனா ருனாவட்

ஒளி ஓவியர்                    : அசீம் பஜாஜ்
இசையமைப்பாளர்          : ஆனந்த் ராஜ் ஆனந்த் (பாடல்கள் மற்றும் இசை)
தயாரிப்பாளர்                    : அசோக் தாகேரியா
மொழி                                : திராவிடர்கள் எதிர்த்த ஹிந்தி


என்ன மேட்டர் படத்துல: இந்த முறை பெரும் பணக்காரர் ஆன சஞ்சய் தத்திடம் இருந்து பணத்தை பறிக்க முயல்கிறார்கள் நம் விசித்திர நால்வர் குழு. அதில் இருந்து சஞ்சய் தத் எப்படி தப்பிக்கிறார் என்பதே நகைச்சுவையான இந்த படத்தின் கதை. இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு த்ரிதேவ் படத்தில் வந்த "ஒயே ஒய் - ட்ரிச்சி தொப்பி வாலே" பாடலை அனுமதி பெற்று ரீமேக் செய்துள்ளார்கள். மல்லிகா ஷெராவத் படத்தில் 'தெறம' காட்டியுள்ளதால் படத்தை பார்த்தே ஆகவேண்டும் என்று அண்ணன் கா'னா கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்) கவனிக்கவும், கங்கணம், கங்கனா அல்ல).

 

06 டிஸ்னி பிக்ஸாரின் அனிமேஷன் படம் கார்ஸ் இரண்டாம் பாகம்: முதல் பாகம் வந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் வந்துள்ளது இந்த இரண்டாம் பாகம், அதுவும் முப்பரிமான வடிவுடன். நம்ம பயங்கரவாதி டாக்டர் செவனுக்கு மிகவும் பிடித்த படம் இது (அவருக்குதான் அனிமேஷன் படங்கள் என்றாலே அல்வா சாப்பிடுவது போலாயிற்றே). அனிமேஷன் படங்களுக்கு ரசித்து ரசித்து விமர்சனம் செய்யும் அவர், வழக்கம் போல இந்த முறை இந்த படத்தின் விமர்சனத்தையும் செய்வார்.

Releasing This Friday

இயக்குனர்                        : ஜான் லாசெட்டர் மற்றும் பிராட் லூயிஸ்
நடிகர்கள்                           : அனிமேஷன் படம் பாஸ், ஒன்லி குரல் மட்டுமே ஸ்டார்களுடையது
இசையமைப்பாளர்          : மைக்கேல் கியாக்கினோ
தயாரிப்பாளர்                    : வால்ட் டிஸ்னி சார்பில் டென்னிஸ் ரீம்
மொழி                                : ஒன்லி ஆங்கிலம், நோ தமிழ் டப்பிங்


என்ன மேட்டர் படத்துல: இந்த படத்தின் சிறப்பு ரெட் கார்பெட் ஸ்கிரீனிங் இப்போதுதான் முடிந்தது. படம் சூப்பர். அதுவும் கார் ரேசிங்கில் துப்பறியும் கதையமைப்பை புகுத்தி அட்டகாசம் செய்துள்ளனர். கிட்டத்தட்ட இரண்டுமணி நேர அனிமேஷன் விருந்து இந்த படம். இதற்க்கு மேலே எதை சொன்னாலும் பயங்கரவாதி கோபித்துக்கொள்வார் என்பதால், மீத விமர்சனத்தை அவரே செய்ய ஆணையிட்டு நகருகிறேன்.

இந்த ஆறு படங்களை தவிர ராங்கோ (அனிமேஷன் படம்) மற்றும் கரிபியன் கடல் திருடர்கள் (Mock-Buster தமிழ் டப்பிங் படம்) ஆகிய இரண்டும்வேறு நாளை ரிலீஸ் ஆகிறது. இந்த வாரம் பார்க்க நிறைய புதிய படங்கள் வந்துள்ளது மனதிற்கு நிறைவை தருகிறது.

image

   Carribean Kadal Kolliyargal

நாளை புதிய தமிழ் படத்தின் விமர்சனத்துடன் வருகிறேன். பை தி வே, இந்த 180 படம் நாளைக்கு அல்ல, நாளை மறுநாளே ரிலீஸ் ஆகிறது. சனிக்கிழமை ராசி சத்யம் தியட்டரை காப்பற்றுமா? பார்க்கலாம்.

Wednesday, June 22, 2011

தி ரெசிடென்ட்-ஆங்கில திரைப்பட விமர்சனம் (The Resident 2011)

இந்த படத்தின் விமர்சன பதிவை படிக்கும் முன்பு இதனைப்பற்றிய நம்முடைய முன்னோட்ட பதிவை ஒரு முறை பார்க்கவும்.

தி ரெசிடென்ட் என்கிற பெயரை கேட்டவுடன் என்னுடைய நண்பர் கூறிய கமென்ட் இதுதான் - "படத்தின் பெயரில் ஈவில் சேர்த்து ரெசிடென்ட் ஈவில் என்று வெளியிட்டால் தமிழ் நாட்டில் படம் செமையாக ஹிட் ஆகும்". அது என்னமோ உண்மைதான். சமீபத்தில் வந்த ரெசிடென்ட் ஈவில் படத்தின் மொக்கை பாகம் கூட தமிழில் வசூலை அள்ளிக்குவித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆனால் படத்தின் தலைப்பில் ரெசிடென்ட் வருவதும், படத்தின் முக்கிய பாத்திரம் ஒரு பெண் என்பதைத்தவிர வேறெந்த ஒற்றுமையும் இந்த படங்களில் இல்லை.

சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதினை இரண்டு முறை வென்ற ஹிலரி ஸ்வான்க் நடித்துள்ளதே இந்த படத்தின் எதிர்ப்பார்ப்பை கூட்டியது. இது போன்ற படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுவது இல்லை. அப்படியே செய்தாலும்கூட அதனை ஒரு மூன்றாம்தர ரசனையுடனே வெளியிடுவார்கள் (சமீபத்திய உதாரணம் கேட் வின்ஸ்லேட்டின் தி ரீடர் படம் தமிழில் ஒரு கில்மா படம் போல விளம்பரப் படுத்தப்பட்டு வந்தது). இப்படி விளம்பரபடுத்தப்பட்டால், மக்கள் அதே எதிர்ப்பார்ப்புடன்தானே வருவார்கள்? அப்போது அவர்களுக்கு கிட்டுவது ஏமாற்றமே அன்றி வேறொன்றுமில்லை (கிட்டத்தட்ட இதைப்போன்ற மனநிலையில் தான் பல பதிவர்களும் செயல்படுகிறார்கள் என்று அண்ணன் கா'னா கூறுகிறார்). நல்லவேளையாக இந்த படத்தை அப்படி வெளியிடவில்லை.

படத்தின் கதை: தன்னை ஏமாற்றிய காதலனை விட்டு பிரிந்து தனியாக வாழ வீடு தேடுகிறார் டாக்டர் ஜூலியட் (ஹிலரி ஸ்வான்க்). அப்போது மிகவும் குறைந்த வாடகையில் ஒரு இருப்பிடம் கிடைக்கிறது. சில பல குறைகள் இருந்தாலும் வீடு பிடித்திருப்பதாலும், வீட்டு உரிமையாளர் ஒரு தாடி வைத்த ஜார்ஜ் க்ளூனி போல இருப்பதாலும் (மேக்ஸ் ஆக ஜெப்ரி டீன் மார்கன்) அந்த வீட்டை வாடகைக்கு எடுக்கிறார் ஜூலியட். நாளடைவில் மேக்ஸ் உடன் நட்பு பலப்படுகிறது. மேக்ஸின் பழகும் தனமையால் கவரப்பட்டு ஒரு முறை தன்னையே இழக்கிறார் ஜூலியட். பிறகு இருவரின் நட்பும் தொடர்கிறது. ஆனால் நாளடைவில் மேக்ஸின் உண்மை சொரூபம் வெளிப்படுகிறது. மேக்ஸ் கிட்டத்தட்ட ஒரு சைக்கோ போலவே செயல்படுகிறார். ஜூலியட் மேல் ஒரு அபரீதமான வெறி கொண்டு இருக்கிறார். ஜூலியட்டின் பழைய காதலன் மனம் திருந்தி வந்தவுடன் அவனை ஜூலியட் ஏற்றுக்கொண்டதை கண்டு மனம் நொந்து அவனை கொன்றும் விடுகிறார்.

ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு பிறகு மேக்ஸின் மேல் சந்தேகம் கொள்ளும் ஜூலியட் அவனிடம் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயல்கிறார். இருவருக்கும் இடையே நடக்கும் திருடன் - போலிஸ் ஆட்டமே படத்தின் மீதம். ஜூலியட்டால் மேக்சிடம் இருந்து தப்பிக்க முடிந்ததா? ஜூலியட் தப்பித்து எப்படி? மேக்சிர்க்கு என்ன நடந்தது என்பதை வெள்ளித்திரையில் காண்க (அல்லது எண்மிய பல்திற வட்டில் கண்டு ரசிக்கவும்).

படத்தின் + கள்: படம் ஓரளவுக்கு விருவிறுப்புடனே செல்கிறது. படத்தின் இரண்டு பிரதான பாத்திரங்களும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள். ஹிலரி ஸ்வான்க் நடித்துள்ள பல படங்களை நான் கண்டுள்ளேன் என்பதால் அவரது அலட்டல் இல்லாத நடிப்பு புதிதல்ல. ஆனால் ஜெப்ரி டீன் மார்கன் நடித்த படங்கள் எதனையும் நான் இதுவரையில் கண்டதில்லை. முதல் முறை பார்க்கும்போதே கவரும் ஒரு ஆளுமை இவரிடம் இருக்கிறது. அதுவே பின்னர் சைக்கோ நடிப்பாக மாறும்போது சிலிர்க்க வைக்கிறார். அதுவும் ஜூலியட் வீட்டில் இல்லாதபோது அவரின் டூத் பிரஷ்ஷை கொண்டு பல் விளக்கி ஒரு எக்ஸ்பிரெஷன் கொடுப்பார் பாருங்கள், பிரகாஷ்ராஜ் தோற்றுவிடுவார் இவரிடம். அதுவும் சாவித்துவாரம் வழியாகவும், மறைந்து இருந்தும் ஜூலியட்டை ரசிப்பது, அவரை மயக்க மருந்து கொடுத்து தனது இச்சைகளை தீர்த்துக்கொள்வது, அவர் கட்டிலுக்கு அடியில் படுத்துக்கொண்டு ...... விடுங்கள், இப்படி எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் எப்படி? படத்தில் பாருங்கள்.

படத்தின் - கள்: ஹாலிவுட்டில் இதுவரை எட்டு லட்சத்தி முப்பதாயிரத்தி ஐநுற்றி இருபத்தி ஆறு முறை இதே கதையை திரையில் கொண்டு வந்து இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் கதையை ஊகிக்க முடிகிறது. சில கட்டங்கள் சைக்கோ படங்களின் க்ளீஷே ஆகவும் இருக்கிறது. இருவரின் நடிப்பையும் எடுத்துவிட்டு பார்த்தால் படத்தில் எதுவுமே இல்லை என்பதே உண்மை. இந்த மாதிரியான சைக்கோ த்ரில்லர் படங்கள் ஹாலிவுட்டில் வருடத்திற்கு நூறு வரும். அவற்றில் ஒன்றில் இருந்து மற்றவற்றை வேறுபடுத்துவது இப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட திறமையான நடிகர்களின் நடிப்பே. ஆகையால் இந்த இருவரை மட்டுமே மனதில் கொண்டு இந்த படம் தயாரிக்கப்பட்டு இருக்கவேண்டும்.

இந்த படத்தை பற்றி கூகிளாண்டவரிடம் விசாரித்ததில் இது முதலில் நேரிடையாக ஹோம் டிவிடியாக வெளியிடப்பட்டது தெரியவருகிறது. ஓரளவுக்கு சுமாரான வரவேற்ப்பை பெற்ற பின்னரே தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்த படம் டிவிடியில் வந்து விட்டது.

தியேட்டரில் பல காட்சிகளை தணிக்கை செய்துள்ளார்கள். குறிப்பாக படத்தின் பத்தாவது நிமிடத்தில் ஜூலியட் குளிக்கும் காட்சி தணிக்கை செய்யப்பட்டது. இதனை கண்டித்து அண்ணன் கா'னா வரும் வெள்ளியன்று காலை எட்டு மணி  முதல் மதியம் இரண்டு மணி வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அறிவித்து இருக்கிறார். இப்படியாக பல காட்சிகள் தணிக்கை துறையால் துண்டிக்கப்பட்டாலும் படம் த்ரில்லராகவே நகர்கிறது.

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:2 bullets  2/6. இரண்டு தோட்டாக்கள்.

கிங்'ஸ் பன்ச்: தி ரெசிடென்ட் - வாடகைக்கே. நிரந்தரமாக அல்ல.

ஷாருக் கானின் ஆல்வேஸ் கபி கபி-ஹிந்தி திரைப்படம் (Always Kabhi Kabhi 17th June 2011)

வழக்கமாக ஒவ்வொரு வாரமும் வரப்போகும் படங்களை வரிசைக்கிரமமாக பிரித்து அவற்றை பார்த்து விடுவது என்னுடைய வழக்கம்.அப்படி இருக்கையில் இந்த படம் Out of Nowhere திடீரென்று வந்தது என்றே சொல்ல வேண்டும். ஹிந்தி சேனல்களில் இதன் விளம்பரத்தை பார்த்து இருந்தாலும் இந்த படம் சென்னையில் ரிலீஸ் ஆகும் என்று நினைக்கவே இல்லை. அதுவும் ஐந்து ஆறு தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் ஆனதைக்கண்டு இரண்டு விஷயங்கள் புரிந்தன: 1. எந்த கட்சி ஆட்சி செய்தாலும், சமீப காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் படங்கள் குறைவு. 2. மற்ற மொழி படங்கள் இங்கே நல்ல வரவேற்ப்பை பெறுகின்றன.

ஆனால் இந்த இரண்டு விஷயங்களை விடவும் வேறொரு முக்கியமான விஷயமே இந்த படத்தை தமிழ் நாட்டில் இப்படி ரிலீஸ் ஆகும்படி செய்து இருக்கிறது. அதாவது இந்த படத்தின் புரோட்டியூசர் ஷாருக் கான் (அதாவது அவங்க மனைவி கவுரி கான்). இந்த காரணத்திற்க்காகவே இந்த ஆல்வேஸ் கபி கபி படம் இங்கே பெருவாரியாக ரிலீஸ் ஆகி இருக்கிறது. பின்னே என்னங்க, ஒரு நட்சத்திர நடிகரும் கூட இல்லாமல், திறமையான தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டிராமல், பெரிய எதிர்ப்பார்ப்பில்லாமல் வரும் ஒரு ஹிந்தி படம் சென்னையில் நல்ல தமிழ் படங்களுக்கு கிடைக்கும் தியட்டர்களை விட அதிக அளவில் ரிலீஸ் ஆனால் அதற்க்கு புரோட்டியூசரின் பெயர் தானே காரணமாக இருக்க முடியும்? இதற்கான விடையை பதிவின் இறுதியில் காண்க.

படத்தின் பின்னணி: ஷாருக் கான் ஆரம்ப காலங்களில் ஒரு டிவி சீரியல் நடிகர் என்பது பலருக்கும் தெரியும். அதன் காரணமாகவே அவர் சீரியல், நாடக துறைகளில் இருந்து வரும் கலைஞர்களை ரசிப்பார். சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு நாடகம் ‘கிராபிட்டி’. அந்த நாடகத்தை எழுதி, இயக்கியவர் ரோஷன் அப்பாஸ் (இவருக்கும் நம்ம நடிகர் திலகம் அப்பாசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை). அந்த கால கட்டங்களில் (Late 90’s) இளைஞர்களின் எழுச்சியையும், அவர்களுக்கு வழங்கப்படும் சுதந்திரத்தையும் மைய்யமாக கொண்டு வந்த இந்த நாடகம் சிலாகித்து பேசப்பட்டது. அப்போதே இவர் ஷாருக்கை சந்தித்து இருந்தாலும், இந்த நாடகம் படமாக மாறுவதற்கு இவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டது. நாடகத்தில் இருந்து பல பகுதிகளை மாற்றி, விளம்பர பகுதிகளை புகுத்தி இன்றைய யங்கிஸ்தான் டேஸ்ட்டிர்க்கு மாற்றி படமாக்கியுள்ளார்கள். படத்தின் புரோட்டியூசர் ஷாருக் என்பதால் ஏதோ விஷயம் இருக்கும் என்றெண்ணி பலரும் இந்த படத்தை பார்க்க துணிந்தார்கள்.

ஆல்வேஸ் கபி கபி படத்தின் கதை: நான்கு மாணவர்கள் (சினிமா இலக்கணத்தின்படி இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள்). அவர்களுக்கு பள்ளி வாழ்வில் ஏற்படும் சுக,துக்கங்களையும் அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்கிற கண்ணதாசன் காலத்து கதைதான் என்றாலும் அதனை பயங்கர பில்ட்-அப்புடனும், சந்தையாக்கல் யுத்திகளாலும் படமாக்கியிருக்கிறார்கள். தன்னால் முடியாததை தன்னுடைய மகள் மூலமாக சாதிக்க நினைக்கும் அம்மாவின் பேராசையால் பள்ளி நாட்களிலேயே நடிகையாகவிருக்கும் ஐஸ்வர்யா, மிகவும் கண்டிப்பான அப்பாவிற்கு பிறந்து அவரை எதிர்த்து பேசும் வாய்ப்பிலாமல் புழுங்கும் சமீர், தன்னுடைய குடும்பத்தில் எல்லோரும் M.I.T.யில் படித்ததால்  அங்கு அட்மிஷன் பெற எப்போதும் படித்துக்கொண்டே இருக்கும் தாரிக் மற்றும் எந்நேரமும் வேலை, வேலை என்று உலக அளவில் வியாபாரம் செய்யும் பெற்றோர்களுக்கு மகளாக பிறந்து தனிமையில் தாயன்பை ஏங்கி பிடிவாத குணங்களின் உருவாக திகழும் நந்தினி என்கிற இந்த நால்வரே படத்தின் முக்கிய பாத்திரங்கள்.

இப்படி ஆரம்பிக்கும் கதையில் வருடாந்திர நாடகபோட்டியில் ரோமியோ ஜூலியட் போட்டிக்கான பாத்திரதேர்வில் ஆரம்பிக்கிறது பிரச்சினை. அதன் பிறகு ஒரு இரவுநேர விடுதியில் (தமிழில் பார்).நண்பர்களை காப்பாற்ற வலிய சென்று போலிஸ் இடம் சிக்கிக் கொள்கிறான் சமீர். அவனிடம் ஐம்பதாயிரம் லஞ்சம் கேட்க, முன் பணதிர்க்கே வழியில்லாமல் வீட்டில் திருடுகிறான். இதன் தொடர்ச்சியான சம்பவங்களில் ஐஸ்வர்யா இவனை தவறாக புரிந்துகொண்டு பேச மறுக்கிறாள். ஒரு சிறிய சம்பவம் மூலம் தாரிக்கை பழி வாங்க அவனது மெயில் ஐடியை ஹாக் செய்து ஏதோ தகிடுதத்தம் செய்து (படத்தை பார்த்த யாருக்குமே புரியல இந்த ஸீன்) அவனுக்கு MITயில் அட்மிஷன் கிடைக்காமல் செய்து விடுகிறாள் நந்தினி. மனமுடைந்து தற்கொலை செய்துக்கொள முயல்கிறான் தாரிக். தன்னுடைய நண்பன் மூலமாக கர்ப்பம் தரித்திருக்கிறோமோ என்று கவலையடையும் நந்தினியை கைவிடுகிறான் அவளது பாய் பிரென்ட். இப்படி நகருகிறது கதை. ஆனால் இடைவெளியில் இருந்து அடுத்து ஒரு நாற்பது நிமிடங்கள் கதை (உண்மையிலேயே) விறுவிறுப்பாகவும், ஜாலியாகவும் நகருகிறது. என்னமோ, ஏதோ என்று எதிர்ப்பார்க்கப்பட்ட கிளைமேக்ஸ் சொதப்பல் ரகம்.

படத்தின் + கள்: படத்தின் மிகப்பெரிய பலமே இந்த நால்வரின் அட்டகாசமான நடிப்புதான்.சரியான பாத்திரங்களுக்கு நேர்த்தியாக ஆட்களை தேர்வு செய்த இயக்குனருக்கு ஒரு ஷொட்டு. அதுவும் தாரிக் ஆக வரும் அந்த நடிகர் மனதை கவருகிறார். கண்டிப்பாக கவனிக்கப்படுவார். தன்னுடைய முதல் படமாக இருந்தாலும் பல இடங்களில் 'அட' என்று வியக்க வைக்கிறார் இயக்குனர். பாடல்கள் ஸ்பீட் பிரேக்கர் ரகமே என்றாலும் அந்த ஸ்கூல் தின் பாடலும், படமாக்கலும் அருமை. பிரெண்ட்ஸ்கேப் , பான்டா என்று பல விளம்பரங்கள் திரைக்கதையில் நுழைவதைக்கண்டவுடனே அது ஷாருக்கின் வேலை என்பது தெரிகிறது. வசனங்கள் பல இடங்களில் பளிச். அதுவும் தாரிக் தற்கொலை செய்துக்கொள்ள முயலும்போது அவனுக்கும் பிரின்சிபலுக்கும் இடையேயான உரையாடல் நம்ம கிரேசி மோகன் வகை.

படத்தின் - கள்: மேலே சொன்னதைதவிர மற்ற எல்லாமே குறைகள்தான். ஹிந்தி படங்கள் அப்படி, ஹிந்தி படங்கள் இப்படி என்று சொல்லும் நண்பர்கள் அங்கேயும் பெரிய பெரிய சொதப்பல்கள் உண்டு என்பதற்கு இந்த படம் ஒரு பிரதான எடுத்துக்காட்டு. இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார் தயாரிக்கும் படம் என்றால் மட்டுமே ஓடிவிடாது என்பது கண்கூடாக தெரிகிறது. திரைக்கதை என்று ஒன்று, படத்தில் மிகவும் மெதுவாக வந்து படம் முடியும்போது எட்டிப்பார்க்கிறது. இப்போது முடியும், இப்போது முடியும் என்று பல காட்சிகளை கண்டவுடன் நினைத்துக்கொண்டேன். ஆனால் அதை எல்லாம் மீறி படம் ஓடிக்கொண்டே இருந்தது. எப்போது முடியும் என்று நொந்து போனேன். ஆரம்பத்தில் வரும் அனைத்து பாடல்களும் தேவையற்றவையே.

படத்தின் மிகப்பெரிய ஐரணி: ஷாருக் கான் தயாரிப்பு என்பதால் படத்தை புரமோட் செய்ய அவரே ஒரு குத்துப்பாட்டில் நடித்து இருந்தார். விளம்பரங்களில் எல்லாம் அவற்றை பற்றியே பெரிதாக சொல்ல, மக்களும் அதனை எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் கிளைமேக்சில் மொக்கை தாங்க முடியாமல் அந்த பாடல் வரும்முன்பே ஓடிவிட்டார்கள். எதனை விளம்பரம் மூலம் எதிர்பார்த்து வந்தார்களோ, அதனைக்கூட பார்க்காமல் விட்டால் போதும்டா சாமி என்று மக்கள் சென்றதே இந்த படத்தின் பெரிய ஐரணி (இதுக்கு தமிழ் வார்த்தை இன்னாபா? யாராவது சொல்லுங்களேன்?).

இந்த கானின் தயாரிப்பு இப்படி சோடைபோக, அடுத்த கானின் தயாரிப்பு மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் யூலை மாதம் முதல் நாள் வெளிவருகிறது. ஆமிர் கானின் அடுத்த தயாரிப்பு பல சர்ச்சைகளுடன் எதிர்ப்பார்ப்பை தூண்டி இருக்கிறது. பார்க்கலாம், அதாவது தேறுமா என்று.

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை: single bullet 1/6 (ஒரே ஒரு தோட்டா).

கிங்'ஸ் பன்ச்: ஆல்வேஸ் கபி கபி - ஆல்வேஸ் நஹி நஹி.

Tuesday, June 21, 2011

பேஜா ப்ரை 2 விமர்சனம் (Bheja Fry Part 2 Hindhi Film 17th June 2011)

இந்த படத்தின் விமர்சன பதிவை படிக்கும் முன்பு இதனைப்பற்றிய நம்முடைய முன்னோட்ட பதிவை ஒரு முறை பார்க்கவும்.

ஹிந்தி சினிமாக்களில் மல்டிபிளெக்ஸ் சினிமாக்கள் என்று ஒரு வகை உண்டு. அதாவது ஒரு குறிப்பிட்ட வகையினரை மட்டுமே மனதில் கொண்டு எடுக்கப்படும் படங்கள். தெளிவாக சொல்வதென்றால் ஹிந்தியில் எடுக்கப்படும் ஆங்கில சினிமாக்கள் என்றும் இவற்றை சொல்லலாம். அதாவது, படம் வெறும் ஏ சென்டர்களில் மட்டுமே ஓடும் அளவிற்கு கதையையும், கதை நடைபெறும் களனையும் கொண்டு இருக்கும். ஆகையால் இவற்றை ஒரே திரை கொண்ட சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டரில் திரையிட தயங்குவார்கள். ஆனால் பல திரைகளை கொண்டு இருக்கும் மல்டிபிளெக்ஸ் அரங்கங்களில் இப்படி பட்ட பிரச்சினைகள் இருக்காததால் தைரியமாக இந்த மாதிரி படங்களை வெளியிடுவார்கள். இப்படி பட்ட படங்களில் ஒரு தனி மரியாதை பெற்ற படமே பேஜா ப்ரை (மூளையை வறுத்தல் அல்லது மூளை பொறியல்).

படத்தின் பின்னணி: நான்கு வருடங்களுக்கு முன்பு சாகர் பெல்லாரி என்கிற இயக்குனர் தி டின்னர் கேம் என்கிற பிரெஞ்சு படத்தின் கதையை ஹிந்தியில் எடுத்தார். ஒரு அப்பிரானியின் சாகசங்கள் என்கிற வகையில் இந்த படம் சேர்த்தி. போகோ சேனலில் மிஸ்டர் பீன் என்றொரு பாத்திரம் வரும் (பின்னர் இரண்டு திரைப்படங்கள் வேறு). அதனைப்போலவே இந்த பாத்திரமும் புத்திகூர்மையில் சோடை போனாலும் தன்னுடைய தூய மனதால்,வெள்ளை உள்ளத்தால் பார்ப்பவர் அனைவரையும் கவரும் விதத்திலேயே இருந்தது. மிகவும் குறைந்த பட்ஜெட்டில் பெரும்பாலும் டிவி நட்சத்திரங்களை மட்டுமே கொண்டு எடுக்கப்பட்ட் இந்த பேஜா ப்ரை என்கிற படம் மல்டிபிளெக்ஸ் படங்களில் ஒரு முக்கியமான படமாக மாறியது (அதற்க்கு முன்னர் மல்டிபிளெக்ஸ் எல்லாம் வருவதற்கு முன்பு வந்த ஒரு முக்கியமான படம் ஹைதராபாத் ப்ளூஸ்).

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிந்தியில் பல இன்டி படங்கள் வந்து வெற்றியையும் பெற்றன. அதனை தொடர்ந்து இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமும் வந்துள்ளது. முதல் பாகம் ஏப்ரலில் வந்ததால் இரண்டாம் பாகமும் ஏப்ரலில் ரிலீஸ் செய்யலாம் என்று முதலில் ஏப்ரல் மாதத்தில் வருவதாக விளம்பரம் செய்யப்பட்டு இருந்த இந்த படம் இப்போது தான் ரிலீஸ் ஆகியுள்ளது.

பேஜா ப்ரை படத்தின் கதை: பல துறைகளில் தடம் பதித்து, வெற்றியும் பெற்று புகழுடன் இருக்கும் ஒரு போலி தொழில் அதிபர் (கே கே மேனன்). இவர் ஒரு சபலிஸ்ட். இவர் அடுத்து தொலைக்காட்சி துறையில் வரவிருப்பதை அடுத்து அவரது நிதி உதவியை பெற நினைக்கிறார் பிரபல தொலைக்காட்சியின் அதிபராகிய அவரது நண்பர் (ராகுல் வோரா). அப்போது அவரது சேனலில் நடக்கும் ஒரு போட்டியில் ஜெயிக்கிறார் இன்கம் டேக்ஸ் துறையில் பணி புரியும் நம்ம ஹீரோ (வினய் பாதக்).அந்த நிகழ்ச்சியின் புரோட்டியூசர் ரஞ்சனி (மினிஷா லாம்பா).வெற்றி பெற்றதால் ஒரு சொகுசு கப்பலில் பிரயாணம் செய்யும் வாய்ப்பை பெறுகிறார் வினய். இன்கம் டேக்ஸ் ரெயிட் இருப்பதால் தன்னுடைய இன்வெஸ்டார் மீட்டிங்கை கப்பலில் வைக்கவும், இவர்களுடன் பிரயாணம் செய்யவும் சம்மதிக்கிறார் கே கே மேனன். அவருக்கு ரஞ்சனி மீது ஒரு ரெண்டு கண்.

இந்த நிலையில் கே கே மேனனின் வரி ஏய்ப்பு பற்றி விசாரிக்கும் வினய் பாதக்கின் உயர் அதிகாரி மாறுவேடத்தில் அதே கப்பலில் வருகிறார். இந்த தகவலை அரை-குறையாக தெரிந்துகொள்ளும் கே கே மேனன், வினய் தான் அந்த இன்கம் டேக்ஸ் அதிகாரி என்றெண்ணி அவரை அழிக்க திட்டமிடுகிறார். இதன் பிறகு நடந்தது என்ன என்பதை (கண்டிப்பாக) வெள்ளி திரையில் கண்டு களிக்கவும்.

படத்தின் சிறப்பு அம்சங்கள்: கண்டிப்பாக இயக்கமும், பாத்திரங்கள் தேர்வும் முதல் இடத்தை பிடிக்கின்றன. குறிப்பாக கே கே மேனன், தீவில் தனியே இருக்கும் பர்மன், கே கே மேனனின் பாதுகாப்பு அதிகாரி, வினய் பாதக்கின் உயர் அதிகாரியாக வரும் சுரேஷ் என்று இவர்களது பாத்திரங்களும், அந்த பாத்திரங்களின் அமைப்பிற்கு இவர்களது பாந்தமான நடிப்பும் பிரம்மாதம். குறிப்பாக படத்தின் இரண்டாம் பகுதியில் கே கே மேனனும், வினய்’யும் போட்டி போட்டுக்கொண்டு நம்மை மகிழ்விக்கிறார்கள். இவர்களது வசனங்கள் மற்றும் டைமிங் இந்த படத்தின் மிகப்பெரிய பலம்.

இரண்டாம் பாகம் என்பதால் மிகுந்த பெருத்த எதிர்ப்பார்ப்புடன் வந்து உள்ளது இந்த படம். அதுவும் மூன்று மாதங்கள் கால தாமதமாக வந்து இருப்பதால் இன்னமும் கூடி உள்ளது எதிர்ப்பார்ப்பு. அதன் காரணமாகவே இந்த படம் நன்றாக இருந்தாலும் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே கூற வேண்டும். அதுவும் வினய் பாதக் கதாபாத்திரம் இன்னமும் சிறப்பாக காமெடி சாகசங்கள் செய்யும் என்று பலரும் கற்பனையுடன் வந்து இருப்பார்கள். அவர் நன்றாகவே நடித்து இருந்தாலும், எதிர்ப்பார்ப்பு மிகுதி என்பதால் சற்று ஏமாற்றமே வருகிறது. அதுவும் முதல் பகுதி கொஞ்சம் போர் என்று அருகில் இருந்த இளம் பெண் கைபேசி மூலம் தன நண்பர்களுக்கு அப்டேட் செய்துக்கொண்டு இருந்ததை மறுக்க இயலாது (அதாவது கொஞ்சம் போர் என்பதை மறுக்க இயலாது).

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:   3/6 - மூன்று தோட்டாக்கள்!

கிங்'ஸ் பன்ச்: பேஜா ப்ரை - பேஷா ட்ரை (பண்ணலாம்). மூளைக்கு வேலை இல்லை.

Sunday, June 19, 2011

மஹா சக்திமான் (GREEN LANTERN) : 17th JUNE 2011 - திரைவிமர்சனம்!

வணக்கம்,

காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படங்களைக் காண்பதென்றாலே எனக்குப் பெரிய கொண்டாட்டம்தான்! அந்த வரிசையில் தற்போது வந்துள்ள படம் தான் க்ரீன் லாண்டர்ன்! சூப்பர்மேன், பேட்மேன், ஸ்பைடர்மேன், X-மென் அளவிற்கு இல்லையென்றாலும் க்ரீன் லாண்டர்னும் அமெரிக்காவில் ஒரு பிரபல காமிக்ஸ் ஹீரோவே! இவரது காமிக்ஸ் கதைகளை நான் சிறிதளவே படித்திருந்தாலும் இக்கதைத்தொடரின் BASIC OUTLINE எனக்கு பரிச்சயம் என்பதால் இப்படத்தை சிறிதளவு எதிர்பார்த்திருந்தேன்!

காமிக்ஸ்களைப் படிக்காதோருக்குஒரு சிறு அறிமுகம்! பிரபஞ்சத்தைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் படைதான் க்ரீன் லாண்டர்ன் கார்ப்ஸ்! இவர்களின் சக்திக்கு மூலதனம் இவர்கள் கையில் அணிந்திருக்கும் ஒரு மோதிரம்! அதை செல்ஃபோன் போல அவ்வப்போது சார்ஜ் ஏற்றிக் கொள்ள வேண்டும்! அதற்கு ஒவ்வொருவரிடமும் ஒரு பச்சை விளக்கு இருக்கும்! மோதிரத்தின் சக்தியைக் கொண்டு பூமியைச் சேர்ந்த க்ரீன் லாண்டர்ன் செய்யும் சாகஸங்களே கதைக்களம்!

பேட்மேன், சூப்பர்மேன் அளவிற்கு ஆழமான கதையம்சம் இல்லாத காரணத்தாலோ என்னவோ காமிக்ஸ்களில் க்ரீன் லாண்டர்ன் அடிக்கடி பல மாற்றங்களுக்கு உள்ளாகும்! விற்பனை குறைந்தால் பழைய க்ரீன் லாண்டர்னை கொன்றுவிட்டு புதிதாக ஒருவரை க்ரீன் லாண்டர்னாக நியமிப்பது சகஜம்! பின்னர் மீண்டும் அவரை உயிர்பித்து கொண்டு வருவதும் வழக்கம்! ஆகையாலேயே இத்தொடரின் மீது பெரிதாக ஈடுபாடு ஏற்பட்டதில்லை!

படம் வேறு மொக்கை என பல தரப்பினரும் கூறி விட்டதால் எந்தவித எதிர்பார்ப்புமின்றிதான் தியேட்டருக்குள் நுழைந்தேன்! படம் சுமாராகவே இருந்தது! நல்ல டைம்பாஸ்! அவ்வளவே!

ஹீரோ ரையன் ரெனால்ட்ஸ் பார்ப்பதற்கு அச்சு அசலாக க்ரிஷ் படத்தில் வரும் ஹ்ரித்திக் ரோஷன் போலவே உள்ளார்! படத்தில் டிம் ராபின்ஸும் வருகிறார்! ஸினெஸ்ட்ரோவாக  மார்க் ஸ்ட்ராங்! அடுத்த பாகத்தை மனதில் கொண்டு இவரை நடிக்க வைத்துள்ளனர்!

இது ஒரு சூப்பர் ஹீரோ படம் என்பதால் நடிப்பு, லாஜிக் போன்ற விஷயங்களை அவ்வளவாக எதிர்பார்ப்பது மடத்தனம்! படத்தில் பொழுதுபோக்கு அம்சங்களை மட்டுமே பார்க்க வேண்டும்! க்ராஃபிக்ஸ், சண்டைக்காட்சிகள் சிறப்பாக இருந்தாலே போதும்! சிறப்பாகவே உள்ளன!

ஆனாலும் நம் ஹிந்து பத்திரிக்கை விமர்சகர் விட மாட்டேனென்கிறார்! அவருக்கு பிடிக்காத இந்த மாதிரி படங்களுக்கெல்லாம் ஓசியில் சென்றுவிட்டு ஏன் தான் புலம்புகிறாரோ தெரியவில்லை!
படத்தை மொக்கையென்றாலும் கூட பரவாயில்லை! ஆனாலும் ஒட்டுமொத்த காமிக்ஸ் தொடரையே அதில் ஒரு வரி கூட படித்திராமல் மொக்கையெனக் கூறுவது எந்த ஊர் நியாயம்?!!

படத்தின் இறுதியில் அடுத்த பாகத்திற்கான அடிக்கோலையும் நாட்டியுள்ளனர்! இப்படத்தின் வெற்றி தோல்வியே அதை நிர்ணயிக்கும்! பார்க்கலாம்!

தியேட்டர் டைம்ஸ்:
  • படம் முடிந்ததும் மறக்காமல் POST-CREDIT SEQUENCEஐ பார்க்கவும்! அடுத்த பாகத்திற்கான முன்னோட்டக் காட்சி வரும்! நம்மூர் தியேட்டர்களில் வழக்கமாக இக்காட்சி துண்டிக்கப்படும் அபாயம் நிறையவே உண்டு! 
  • கோவை கனகதாரா தியேட்டரில் 3Dல் படம் பார்த்தேன்! இது அவதார், குங்ஃபூ பாண்டா போல இல்லாமல் 2Dல் படமாக்கப்பட்டு 3Dக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது! படம் பார்ப்போரிடமிருந்து பணம் பிடுங்குவதற்கான ஒரு யுக்தியே என்றாலும் 3D நன்றாகவே இருந்தது! குங் ஃபூ பாண்டா அளவிற்கு சிறப்பாக இல்லையெனினும் பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன் 4 அளவிற்கு மொக்கையாக இல்லை!
  • படத்தை ஆங்கிலத்தில்தான் பார்த்தேன் என்றாலும் ஆங்கில சப்-டைட்டிலுடன் திரையிட்டிருந்தது பாராட்டுக்குரியது!
  • தமிழில் இப்படம் மஹா சக்திமான் என்று ரிலீஸாகியிருக்கிறது! வந்துவிட்டான் பச்சை அவதார் என்ற TAGLINE வேறு! தமிழில் பார்த்த வேண்டப்பட்ட விரோதி கிங் விஸ்வா டப்பிங் ஓகே ரகம் என்று கூறுகிறார்!
  • சென்னையிலுள்ள டப்பிங் பட ரசிகர்களுக்கு ஒரு செய்தி! வழக்கமாக எந்த டப்பிங் படம் ரிலீஸானாலும் அதைத் தேடி பைலட் தியேட்டருக்கு ஓடும் மக்கள் இம்முறை ஏமாந்து போகக் கூடும்! X-மென் ஃபர்ஸ்ட் க்ளாஸ் இன்னும் எல்லா ஊர்களிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் பைலட்டிலும் அதுவே ஓடுகிறது! மஹா சக்திமான் காஸினோவில் ரிலீஸாகியுள்ளது! சமூக நலன் கருதி இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது!
தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:

3/6 - மூன்று தோட்டாக்கள்! டைம்பாஸ் படம்!

சூப்பர் ஹீரோ திரைப்பட ரசிகர்கள் ஒரு முறை பார்க்கலாம்!

பயங்கரவாதியின் பன்ச்:

க்ரீன் லாண்டர்ன்- லோ வோல்டேஜ்!

ட்ரைலர்:

Friday, June 17, 2011

அவன் இவன் : 17th JUNE, 2011 - திரைவிமர்சனம்!


வணக்கம்,

எந்தவொரு படம் பார்ப்பதற்கு முன்பும் அதைப் பற்றிய சில எதிர்பார்ப்புகளை நாமாகவே நம் மனதில் ஏற்படுத்திக்கொண்டே தியேட்டருக்குள் நுழைவோம்! ரஜினி, கமல், விஜய்காந்த், அஜீத், விஜய் போன்றோரின் படங்களுக்கு ஓவ்வொரு விதமாக எதிர்பார்ப்புக்கள் நமக்கு இருக்கும்! அதே போலத் தான் பாலாவின் படங்களுக்கும்!

அடிப்படை மனித உரிமை, பெண்ணுரிமை, ஏன் மிருக உரிமை கூட இவர் படங்களில் காணக் கிடைக்காது! அதிகார வர்க்கத்தினரையும், பிற மதங்களையும் கேவலமாக சாடும் காட்சியமைப்புகள் வலிந்து திணிக்கப்பட்டிருக்கும்! கதை திரைக்கதை போன்ற விஷயங்களை ரொம்பவே மெனக்கெட்டு தேட வேண்டியிருக்கும்! பாலாவின் டோப்படித்த கற்பணையில் உருவான சில குதர்க்கமான குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரங்கள் ஏன் எதற்கென்றே தெரியமால் படத்தில் வளைய வருவார்கள்! எந்த வித நெறிகளுக்கும் இவர்கள் கட்டுப்பட மாடார்கள்! இவர்களின் அனைத்து வசவுகளையும் வாங்கிக் கொண்டு இவர்களை காதலிக்கும், பின்பாதியில் காணாமல் போய் விடும் லூஸு ஹீரோயின்கள்! இடைவேளையிலும், க்ளைமாக்ஸுக்கு முன்பும் கதையோட்டத்திற்கு சம்பந்தமேயில்லாத சில ட்விஸ்ட்டுகள்! ஒன்றுக்கொன்று தொடர்பேயில்லாமல் நகரும் காட்சிகளின் முடிவில் ரத்தக்களரியான க்ளைமாக்ஸ்!

இவை அனைத்தும் அவன் இவனிலும் உண்டு! ஆனால் வழக்கமான IMPACT இதில் குறைவு! ஒரு வேளை பழகி விட்டதோ?!! அல்லது ஏற்கெனவே இவை அனைத்தையும் இவரது முந்தைய படங்களிலேயே பார்த்து விட்டதால் அலுப்பு தட்டி விட்டதோ?!! இல்லை பாலா அடிக்கும் கஞ்சாவில் தான் வீரியம் குறைந்து விட்டதோ?!!

பிதாமகனை அப்படியே லைட்டாக டிங்கரிங், பெயிண்டிங் செய்து அவன் இவன் என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர்! ஆனால் அதில் சூர்யாவும், விக்ரமும் இருந்தார்கள்! இதிலோ விஷாலும், ஆர்யாவும்! பாவம் விஷால் தான்! தேசிய விருது வாங்கித் தர்றேன்னு ஆசை காட்டி கூட்டி வந்து மோசம் பண்ணியிருக்காங்க! ஒரு வேளை இதில் ஆர்யாவின் உள்குத்து ஏதாச்சும் இருக்கோ?!! “மவனே, நான் இந்தாளுகிட்ட மாட்டிகிட்டு 2 வருஷம் நொந்து நூடுல்ஸானேன்! நீயும் சிக்கி சீரழி!” என்று படப்பிடிப்பின் போது மனதுக்குள் வக்கிரமாக சிரித்துக் கொண்டிருந்தாரோ என்னவோ?!! பாலாவுடன் சேர்ந்து இவரும் சாடிஸ்ட் ஆயிட்டாரோ?!!

வசனம் எஸ்.ரா.! படம் ரிலீஸுக்கு முன் அவர் விட்ட ஸ்டேட்மெண்ட் இது! அவர் சொன்ன மாதிரி படத்தில் ஒன்றுமேயில்லை என்பது வேதனை!
இதுவரை பாலாவின் படங்கள் இருண்மையான உலகை பற்றி மட்டுமே பேசி வந்து இருக்கிறது. ‘அவன் இவன்’ படம் அதிலிருந்து விலகி வாழ்க்கையை கொண்டாடும் நோக்கில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தவறுகளை தாண்டி வாழ்வை எப்படி கொண்டாட்டமாக வைத்திருப்பது என்பதை படம் சொல்கிறது. ”
இசை யுவன்! சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை! வழக்கமாக பாலா படங்களில் இசைஞானி புகுந்து விளையாடியிருப்பார்! படம் அவரை ரொம்பவே மிஸ் செய்கிறது!

தியேட்டர் டைம்ஸ்:

  • தமிழகம் முழுக்க அனைத்து தியேட்டர்களிலும் திங்கள் வரை ஹவுஸ் ஃபுல்லாம்! குறிப்பாக ஊட்டியில் நான் இந்தப் படத்தை பார்த்த ‘லிபர்டி’ தியேட்டரில் 90% ஃபுல்! வழக்கமாக வெள்ளிக் கிழமைகளில் இந்த தியேட்டரில் 10 பேருடன் புதிய படங்களை பார்க்கும் எனக்கு இது இன்ப அதிர்ச்சி! மழையையும், கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் டூரிஸ்ட்டுகள் கூட்டம் கூட்டமாக குடும்பம் குடும்பமாக வந்து அரங்கை நிறைத்து கண்கொள்ளாக் காட்சி! அந்த அளவிற்கு படத்திற்கு எதிர்பார்ப்பு! 

படம் முடிந்ததும் நானும் வேண்டப்பட்ட விரோதி கிங் விஸ்வாவும் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் தொகுப்பு உங்களுக்காக!

கிங் விஸ்வா: அய்யோ! அய்யோ! அய்யோ! அய்யோ! தலைவரே! அந்த க்ளைமாக்ஸை பார்த்தீங்களா?!! தலையில முட்டிகிட்டு செத்துரலாமான்னு இருக்கு!

டாக்டர் செவன்: ஹே! ஹே! ஹே! ஹே!

கிங் விஸ்வா: தலைவரே! நான் கொலை வெறில இருக்கேன்! நீங்க என்னடான்னா சிரிக்கிறீங்க!

டாக்டர் செவன்: அதெல்லாம் என்ன பெரிய கொலை வெறியூட்டும் காட்சி! ஹே! ஹே! ஹே! ஹே!

கிங் விஸ்வா: நீங்க மனுஷனே கிடையாது!

டாக்டர் செவன்: வுடுங்க ஹைனஸ்! நீங்க க்ளைமாக்ஸை பாத்து பயந்துட்டீங்க! ஆனா நானெல்லாம் அதை விட அதிர்ச்சிகரமான காட்சியையெல்லாம் இடைவேளை முடிஞ்சு கொஞ்ச நேரத்துலேயே பாத்துட்டேன்! அதுக்கு முன்னாடி க்ளைமேக்ஸெல்லாம் ஜுஜுபி! ஹே! ஹே! ஹே! ஹே!

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:

2/6 - இரண்டு தோட்டாக்கள்!

இது ஒலக சினிமாவும் அல்ல! வழக்கமான தமிழ் சினிமாவும் அல்ல! இது ஒரு டிபிக்கல் பாலா படம்!

பயங்கரவாதியின் பன்ச்:

அவன் இவன் - BALA LIGHT!

பி.கு.:-

படம் பார்க்கப் போகும் முன்னே எதிர்பார்ப்புகள் இருப்பது போல் அதன் விமர்சனத்தை படிக்கும் முன்னும் சில எதிர்பார்ப்புகள் இருக்கும்! இதோ அந்த எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு வாக்கியம்!
விளிம்பு நிலை மனிதர்களின் மிகைப்படுத்தப் பட்ட உணர்ச்சிகளின் பிரதிபலிப்பே பாலாவின் அவன் இவன்!”
அப்பாடா! ‘விளிம்பு நிலை மனிதர்கள்’ என்ற சொற்றொடரை வாக்கியத்தில் அமைத்து அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்து பதிவிட்டாகி விட்டது! இனி நான் ‘அவன் இவன்’ பார்த்த பின்னாலும் நிம்மதியாக தூங்குவேன்!

தியேட்டர் டைம்ஸ் 02 : 17th June 2011 அன்று வெளியாகும் படங்களின் முன்னோட்டம்

ப்ரிய தோழமைக்கு,
ஒரு அருமையான திரைப்படம் ஏற்படுத்தும் உணர்வானது நெடுநாள் பிரிந்த நல்ல சிநேகிதத்தை மீண்டும் சந்தித்தமைக்கு சமம் என்று பலரும் கூறுவார். அவ்வாறே இந்த வாரமும் திரைக்கு வரும் படங்களில் நல்ல சிநேகிதம் கிட்டுமா என்ற கேள்வியுடன் இந்த பதிவினை ஆரம்பிக்கிறேன்
.

பின்னே என்னங்க, ஏதோ நான்  பெரிய இலக்கியவியாதி மாதிரி எழுதுவதாக எனக்கே சந்தேகம் வர, அதனால்தான் அந்த முதல் பத்தியை அடித்து விட்டு புதியதாக ஆரம்பிக்கிறேன் (அதே நான் ஒரு இலக்கியவியாதியாக இருந்தால் அந்த பத்தியை அடிக்காமல் அப்படியே ஆரம்பித்து இருப்பேன்). சென்ற வாரம் வந்த படங்களில் ஒன்று மொக்கை, இரண்டு சூப்பர். அதே போல இந்த வாரமும் ஏதாவது ஒரு நல்ல படம் வந்து நம்ம நேரத்தை நல்லபடியாக கழிக்க உதவுமா என்று பார்க்க இந்த பதிவு உங்களுக்கு உதவும்.

01 பாலாவின் அவன் இவன் : இந்த படம் நேரிடையாக தெலுகில் வாடு வீடு என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது. பாலாவின் சென்ற படம் ஆந்திராவில் நல்லதொரு வரவேற்ப்பை பெற்றதாலும், பிதாமகன் அங்கு சூப்பர் ஹிட் என்பதாலும் இந்த முயற்சி. தமிழில் இந்த படம் ஓடாது என்று நண்பர் ஒருவர் என்னிடம் ஆயிரம் ருபாய் பந்தையம் கட்டியுள்ளார். அட்லீஸ்ட் அதற்காவது பாலாவின் இந்த படம் ஓடவேண்டும்.

 Avan Ivan Poster
Film Title

அவன் இவன் (தெலுகில் வாடு வீடு)

Director

பாலா

Star Cast

ஆர்யா, விஷால், மது ஷாலினி, ஜனனி & ஆர்.கே

Genre

காமெடி, குணசித்திரம் பாலா படம்

Producer(s)

கல்பாத்தி எஸ் அகோரம்

Music Director

யுவன் ஷங்கர் ராஜா

Language

தமிழ் (தெலுகிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது)

என்ன மேட்டர் படத்துல? 

எஸ். ரா: இதுவரை பாலாவின் படங்கள் இருண்மையான உலகை பற்றி மட்டுமே பேசி வந்து இருக்கிறது. ‘அவன் இவன்’ படம் அதிலிருந்து விலகி வாழ்க்கையை கொண்டாடும் நோக்கில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தவறுகளை தாண்டி வாழ்வை எப்படி கொண்டாட்டமாக வைத்திருப்பது என்பதை படம் சொல்கிறது.

 

02 மகா சக்திமான்: நம்ம தேனாண்டாள் பில்ம்ஸ் ஒரு படத்தை தமிழில் ரிலீஸ் செய்தாலே அது வெற்றியடையப்போகும் படம் என்று விநியோகஸ்தர்கள் மத்தியில் பரவலான பேச்சு உண்டு. அது உண்மையா என்பதை இந்த படம் வந்த பிறகே விவாதிக்க வேண்டும். முக்கியமான ஒரு விஷயம் என்னவெனில் வழக்கமான டப்பிங் பட உலக ரசிகர்களின் மஜா மன்றமாகிய பைலட் தியேட்டரில் இது ரிலீஸ் ஆகவில்லை. மோட்சம், கேசினோவில் ரிலீஸ் ஆகிறது.

 Green lantern Poster
Film Title Green Lantern (மகா சக்திமான்)
Director Martin Campbell
Star Cast

Ryan Reynolds, Blake Lively, Peter Sarsgaard & Mark Strong

Genre Super Hero
Producer(s)

Donald De Line & Greg Berlanti

Music Director James Newton Howard
Language English (மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழிலும், தெலுகிலும் ரிலீஸ் ஆகிறது)
என்ன மேட்டர் படத்துல? 

DC காமிக்ஸ் கதையில் இருந்து மற்றுமொரு சூப்பர் ஹீரோ கதை. ஒரு பச்சை விளக்கு. ஒரு மோதிரம். அந்த மோதிரத்தை ஒவ்வொரு நாளும் விளக்கில் சார்ஜ் செய்ய வேண்டும். அந்த மோதிரம் சூப்பர் ஹீரோ ஆகும் அனைத்து சக்திகளையும் கொண்டது. வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஹால் ஜோர்டானிடம் அந்த மோதிரம் வந்தடைகிறது. உலகை அவரால் காப்பாற்ற முடியுமா? இந்த படத்தை காப்பாற்ற இயக்குனரால் முடியுமா?

 

03 பேஜா ப்ரை 2: முதல் பகுதி சூப்பர் டூப்பர் ஹிட். ஹிந்தி சினிமாவில், ஏன் இந்திய சினிமாக்களில் மல்டிப்ளெக்ஸ் படங்களுக்கு மறுவாழ்வு கொடுத்த படம் அது. அந்த படம் வந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது அதன் இரண்டாம் பாகம் வருகிறது. அந்த முதல் பகுதியின் தரத்தில் பாதி இருந்தாலே படம் ஓடும். இது எப்படியோ?

 Bheja Fry 2 Poster
Film Title பேஜா ப்ரை 2
Director Sagar Ballary
Star Cast

Vinay Pathak, Kay Kay Menon, Minisha Lamba, Suresh Menon & Amol Gupte

Genre  காமெடி (குறிப்பாக பிளாக் ஹியூமர்)
Producer(s) Mukul Deora
Music Director

Ishq Bector, Sneha Khanwalkar & Sagar Desai

Language

ஹிந்தி

என்ன மேட்டர் படத்துல? 

இந்த முறை நம்ம கதாநாயகன் வினய் பாதக் கப்பலில் தன்னுடைய அட்டகாசத்தை தொடருகிறார். கப்பலில் அவரிடம் மாட்டிக்கொண்டு முழிப்பது கே கே மேனன் (யமகாதக நடிகர் இவர்). அதுவுமில்லாமல் ஒரு R.D பர்மன் இசை ரசிகர் வேறு வந்து குழப்பத்தில் கல்லா கட்டுகிறார் (அமோல் குப்தே). மொத்தத்தில் இன்னுமொரு கலாட்டா படம் ரெடி.

 

04 தி ரெசிடென்ட்: கூடவே ஈவில் சேர்த்து இருந்தால் படம் தமிழில் சூப்பர் ஹிட் ஆக ஓடும் என்று நண்பர் கமென்ட் அடிக்கிறார். பின்னே? ஹிலரி ஸ்வான்க் இரண்டு முறை ஆஸ்கர் விருது வாங்கிய நடிகையாக இருந்தாலும், நம்ம ஆட்கள் எப்போது ஹீரோயினுக்காக படத்தை பார்த்து இருக்கிறார்கள்? சிம்ரனே ஜோடி இல்லாமல் நடித்தாலும் படம் ஓடாது என்று அண்ணன் யூனா அடிக்கடி சொல்வார்.இந்த படமும் பெரிய எதிபார்ப்பு இல்லாமல் வருகிறது. பார்க்கலாம்.

 The Resident Poster
Film Title The Resident
Director Antti Jokinen
Star Cast

Hilary Swank, Jeffrey Dean Morgan & Christopher Lee

Genre Thriller
Producer(s) Simon Oakes
Music Director  
Language English
என்ன மேட்டர் படத்துல? 

நம்ம ஹீரோயின் ஒரு மருத்துவர். வீடு வாடகைக்கு தேடும்போது ஒரு வீட்டை பார்த்து பிடித்து போக, அங்கு குடி போகிறார். ஆனால் அங்கே அவர் தனியாகத்தான் இருக்கிறாரா? வீட்டு ஓனர் (இவர் பார்க்க நம்ம ஜார்ஜ் க்லூனிக்கு கருப்பு தாடி வச்ச மாதிரி இருப்பதாக அவரே சொல்லி இருப்பார்) பார்க்க நல்லவராக இருந்தாலும் அவருள்ளே மறைந்து இருக்கும் மர்மம் என்ன? திடு திடுக்க வைக்கும் திருப்பங்களுடன் திக், திக் சம்பவங்கள் நிறைந்த படம் (என்று விளம்பரம் செய்துள்ளார்கள்).

 

நாளைக்கு அவன் இவன் மற்றும் மகா சக்திமான் விமர்சனங்களுடன் சந்திக்கலாம்.