Thursday, January 26, 2012

SHERLOCK HOLMES: A GAME OF SHADOWS - 29.12.2011 - திரைவிமர்சனம்!

வணக்கம்,

ஷெர்லக் ஹோம்ஸ் கதைத்தொடரின் பரம் ரசிகன் நான்! கதைகள் மட்டுமின்றி காமிக்ஸ், சினிமா, டிவி சீரியல் என பல வடிவங்களில் ஹோம்ஸ் வெற்றி பெற்றுள்ளார்!

2009ல் கை ரிட்சி இயக்கத்தில் ராபர்ட் டெளனி ஜூனியர், ஜூட் லா நடிப்பில் புதிய ஷெர்லக் ஹோம்ஸ் படம் வந்தது! இப்படம் வெளியானவுடன் ஒரு தேனிக்கூட்டை கலைத்து போட்டது போன்ற சூழல் நிலவியது! ராபர்ட் டெளனி ஜூனியர் இங்கிலீஷ்காரன் இல்லையென்பது முதல், ஹோம்ஸ் வாட்சனின் நட்பை ஒரின பாலியல் உறவு என எண்ணத் தோன்றும் வகையில் சித்தரிக்கப் பட்டது வரை ஏகப்பட்ட சர்ச்சைகள்!

ஹோம்ஸின் தீவிர விசிறிகள் படத்தை வெறும் ஆக்‌ஷன் படமாக பாவித்து காறித் துப்பினர்! ஹோம்ஸின் மதியூகத்தை சரியாகப் பயன்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டினர்! கை ரிட்சி தரப்போ நாங்கள் நாவலில் வரும் நுண்ணிய பல விஷயங்களை, காலப்போக்கில் மற(றை)ந்து போன ஹோம்ஸ் மற்றும் வாட்சனின் சண்டையிடும் திறமைகளை மீட்டெடுத்துள்ளோம் என்று வாதிட்டனர்! பல்வேறு சர்ச்சைகளுக்கு உண்டான போதிலும் படம் சூப்பர் டூப்பர் ஹிட்! இல்லையெனில் இரண்டாம் பாகமெல்லாம் வருமா?!!

அதிலும் இரண்டாம் பாகத்தில் ஷெர்லக் ஹோம்ஸ் தனது பரம் வைரியான புரபசர் மோரியார்டியுடன் மோதுவதால் படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு!

கதை:

முதலாம் உலக யுத்தத்தை துவக்க முயன்று வரும் புரபஸர் மோரியார்டியை அந்தக் காலத்து ஜேம்ஸ் பாண்ட் பாணியில் ஹோம்ஸ் தடுத்து நிறுத்துவதுதான் கதை!

சுவாரசியமான துணுக்குகள்:
  • கட்டம் போட்ட கோட்டு, தொப்பி, வாயில் எப்போதும் புகையும் பைப், தனிமையில் வயலின் வாசித்துக் கொண்டே கேஸை சுளுவாக முடிப்பவர் என்று நாமறிந்த (அல்லது அறிந்ததாக நினைத்துக் கொண்டிருக்கும்) ஹோம்ஸின் அத்தனை குணாதிசயங்களையும் இப்பட வரிசை நொறுக்கித் தள்ளுகிறது!
  • ஹோம்ஸை ஒரு ECCENTRIC GENIUS ஆகவே சர் ஆர்த்தர் கோனன் டாயல் உருவாக்கினார்! நம்பாதவர்கள் THE DYING DETECTIVE கதையை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்! காலப் போக்கில் அவரின் இமேஜ் மாறி விட, ஒரிஜினல் ஹோம்ஸை நம் கண் முன்னே மீண்டும் நிறுத்த முயல்கிறார் கை ரிட்சி!
  • இப்படத்தில் ஹோம்ஸின் அண்ணன் மைக்ராஃப்ட் அறிமுகமாகிறார்! THE LEAGUE OF EXTRAORDINARY GENTLEMEN காமிக்ஸ் கதையில் வருவது போலவே ஒரு உளவுத்துறை தலைவராகவும், உயர் மட்ட அரசு தூதராகவும் வருகிறார்!
  • அதே போல் டாக்டர் வாட்சனை சற்றே மடத்தனமாக சித்தரித்திருக்கும் பழைய படங்களின் முறையிலிருந்தும் இப்பட வரிசை மாறுகிறது! இது ஒரு வரவேற்கத் தக்க மாற்றம்!
  • முதல் பாகத்தில் ஹீரோயினாக வரும் ஐரீன் ஆட்லர் (ரேச்சல் மெக் ஆடம்ஸ்) கதாபாத்திரம் ஆரம்பத்திலேயே கொல்லப் படுவது பரிதாபம்! அவருக்கு பதிலாக வேறொரு ஜிப்சி பெண் ஹீரோயினாக வருகிறார்! ஆம்! ஃபாரினிலும் கூட ஹீரோயின் இல்லாமல் படம் பண்ண மாட்டேங்குறாங்கப்பா!
  • ஜேம்ஸ்பாண்ட் பாணியில் ஹோம்ஸ் கண்டம் விட்டு கண்டம் தாவி சாகஸம் செய்கிறார்! டமால், டுமீல் என்று படம் நெடுக வெடியோசை! ஷெர்லக் ஹோம்ஸ் படம் பார்க்கும் உணர்வே வரவில்லை! மாறாக ராஜா ராணி காலத்து ஜேம்ஸ் பாண்ட் போலவே வலம் வருகிறார் ஹோம்ஸ்!
  • ஷெர்லக் ஹோம்ஸ் ஒரு மாறுவேட நிபுனர் என்று சில கதைகளில் குறிப்பிடப் பட்டிருக்கும்! ஆனால் இப்படத்தில் அத்திறமையை அதீதமாகவே கையாண்டுள்ளனர்! காட்சிக்கொரு முறை கெட்டப் மாற்றுகிறார் ஹோம்ஸ்!
  • முதல் படத்தில் ஹோம்ஸுக்கும் வாட்சனுக்கும் இருப்பதாக குறிப்பால் உணர்த்தப்பட்ட ஓரின உறவை பலப்படுத்தும் வகையில் இப்படத்தில் மேலும் காட்சிகள் உள்ளன! அதுவும் ஹோம்ஸ் பெண் வேடமிடும் காட்சி கொஞ்சம் ஓவர் ரகம்!
  • திரைப்படம் THE FINAL PROBLEM என்ற கதையை தழுவியிருக்கிறது! அதிலும் குறிப்பாக அந்த க்ளைமாக்ஸ் காட்சி!
  • படம் முழுவதும் ஜேம்ஸ்பாண்ட் பாணி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்திருந்தாலும் க்ளைமாக்ஸில் ஹோம்ஸும், மோரியார்ட்டியும் மோதிக் கொள்ளும் காட்சி படமாக்கப் பட்ட விதம் அபாரம்!
  • இரு மாமேதைகள் மோதிக் கொள்ளும் களம் எதுவாக இருக்கும் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா?!! ஒரு புயல் வேக சதுரங்க ஆட்டத்தில்! அதிலும் ஹோம்ஸும், மோரியார்ட்டியும் எதிராளியின் ஓவ்வொரு அசைவையும் சிலபல ஆட்டங்கள் முன்கூட்டியே யூகித்து மனதளவிலேயே வெற்றி தோல்வியை நிர்ணயித்துக் கொள்வது... அப்பப்பா!
  • கடைசி காட்சியில் மூன்றாம் பாகத்திற்கும் அடி போடுகிறார்கள்! வரட்டும்! அதையும் பார்ப்போம்!
நிறைகள்:
  • ராபர்ட் டவுனி ஜூனியர், ஜூட் லா மற்றும் வில்லன் மோரியார்ட்டியாக வரும் ஜாரெட் ஹாரிஸின் அற்புதமான நடிப்பு!
  • க்ளைமாக்ஸ்!
குறைகள்:
  • ஷெர்லக் ஹோம்ஸ் தனது மூளை பலத்தை உபயோக்கிக்கும் தருணங்கள் பின்புலத்தில் நடைபெறும் ஆக்‌ஷன் காட்சிகளில் காணாமல் போய்விடுவது!
தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:
4/6 - நான்கு தோட்டாக்கள்!
ஒரு கட்டை விரல் மேலே!

ட்ரைலர்:

THE BUSINESSMAN: 13.01.2012 - திரைவிமர்சனம்!

வணக்கம்,

எனது வேண்டப்பட்ட விரோதியாகிய ஒருவரின் ரசனை அலாதியானது! தமிழில் போக்கிரியை பார்க்காமலேயே க்ளைமாக்ஸில் வரும் போலீஸ் விஜய் வாட்ச்மேன் கெட்டப்பில் வருவதாக நக்கலடிப்பார் (அது உண்மைதான்...இருந்தாலும்)! தெலுங்கில் மகேஷ் பாபு போலீஸ் கெட்டப்பில் செம கெத்தாக இருந்ததாக பீலா விடுவார்! அப்புறம் படம் பார்த்த பின்புதான் மகேஷ் பாபு என்.சி.சி. மாணவனைப் போல தோற்றமளிக்கும் உண்மை புரிந்தது!

அதே போல் எந்தவொரு தெலுங்கு ரீமேக் படத்தையும் தமிழில் மொக்கையாக இருப்பதாகவும், தெலுங்கில் அதன் ஒரிஜினல் சூப்பராக இருந்ததாகவும் கதையளப்பார்! இவ்வளவு நாள் அவர் சொல்வதை நம்பிக் கொண்டுதான் இருந்தேன், நானும் தெலுங்கில் படங்கள் பார்க்க ஆரம்பிக்கும் வரை!

தூக்குடு என்றொரு மகேஷ் பாபு படத்தை இவரின் தொல்லை தாங்காமல் பார்த்து தொலைத்தேன்! 1960களிலேயே அவுட் ஆஃப் ஃபேஷன் ஆகி விட்ட ஒரு திரைக்கதை உத்தியைக் கையாண்டு மரண மொக்கை போட்டது படம்! ஆனால் இவரோ இதுக்கெல்லாம் உங்களுக்கு ரசனை போதாது என்றெல்லாம் கடுப்பேற்றினார்!

மஹாதீரா போன்ற அற்புதமான படங்கள் அவ்வப்போது தெலுங்கில் வருகின்றன தான், இல்லையென்று சொல்லவில்லை! ஆனால் ஆந்திராவாலாக்களே மொக்கையென்று ஒதுக்கி விட்ட படங்களை இவர் மட்டும் எப்படி அற்புதம் என்று ரசிக்கிறாரோ புரியவில்லை!

சரி, மொக்கை போட்டது போதும்! இனி படத்தை பற்றி பார்ப்போம்!

பூரி ஜகன்னாத், மகேஷ் பாபு என்கிற வெற்றிக் கூட்டணியில் வந்திருக்கும் படம் என்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்பு இருந்தது! கோவையில் thecinema திரையரங்கில் இப்படத்தை கண்டுகளித்தேன்!

கதை:

சாதாரண மனிதன் ஒருவன் மும்பைக்கு வந்து ஒரு தாதாவாகி பின்னர் கார்ப்பரேட் பாணியில் இந்தியா முழுக்க தன் ரெளடி ராஜ்யத்தை எவ்வாறு நிறுவுகிறான் என்பதுதான் கதை! இதில் வழக்கமான தெலுங்கு படங்களுக்குரிய அனைத்து மசாலா சமாச்சாரங்களும் அடக்கம்!

சுவாரசியமான துணுக்குகள்:
  • அமுல் பேபி போல் மொழு மொழுவென்றிருக்கும் மகேஷ் பாபு வரிக்கு வரி பன்ச் வசனம் பேசும் போது ஆரம்பத்தில் சற்றே இடித்தாலும் போகப் போக அது பழகிப்போய் விடுகிறது! தெலுங்குப் படத்தில் இதெல்லாம் சகஜமப்பா என்று எண்ணிக் கொள்ள வேண்டியதுதான்!
  • தமிழ் படத்தில் மட்டுமல்ல தெலுங்கு படத்திலும் கூட செகண்ட் ஹாஃபில் ஹீரோயின் வந்தால் கண்டிப்பாக ஒரு டூயட் என்பது மாற்றக்கூடாத விதியாகும்!
  • படத்தில் வரும் பாதி வசனங்களும், பாடல் வரிகளும் ஹிந்தியிலேயே உள்ளன! பெரும்பாலான் தெலுங்குப் படங்களில் இப்படித்தான்! தமிழில் தான் காஷ்மீர் தீவிரவாதிக்கு கூட செந்தமிழ் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது!
  • காதல் காட்சிகள் அப்படியே போக்கிரியிலிருந்து லைட்டாக டிங்கரிங், பெயிண்டிங் செய்திருக்கிறார்கள்! சண்டைக் காட்சிகளுக்கும் அதே லொகேஷன், அதே நடிகர்கள்! எங்கே தவறிப் போய் போக்கிரி படத்துக்கு மறுபடியும் வந்துவிட்டோமோ என்று எண்ணத் தோன்றுகிறது!
  • மகேஷ் பாபுவுக்கு படத்தில் உச்சா வருவதை சுண்டு விரல் தூக்கிக் காட்டும் ஸ்கூல் பையனைப் போல ஒரு மேனரிசம்! கேட்டால் மும்பையையே உச்சா போக வைக்கப் போகிறாராம்! முடியல...!!!
  • படத்தின் தீம் பாடலை மகேஷ் பாபுவும், பூரி ஜகன்னாத்தும் இணைந்து பாடியிருப்பதை படம் முடிந்த பின் டைட்டில் போடும் போது 'கொலவெறி' ஸ்டைலில் படம்பிடித்து காட்டுகிறார்கள்! DON'T MISS IT!
  • போக்கிரி (தெலுங்கு) போலவே இதிலும் காமெடி ட்ராக் இல்லை! அதனால் காஜல் அகர்வால் வரும் பாடல் காட்சிகள் தவிர மற்றவையெல்லாம் ஜெட் வேகத்தில் பறக்கின்றன! NO FAT IN THE MOVIE!
  • தமனின் பிண்ணனி இசை எண்பதுகளில் இளையராஜா போட்ட ஹீரோயிச இசையை ஞாபகப் படுத்துகிறது! 
  • தமன் காப்பியடிப்பதில் வல்லவர் என்பது அனைவரும் அறிந்ததே! ஆனால் க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டின் கெளபாய் பட (A FISTFUL OF DOLLARS) இசையை ரொமான்சுக்கு பயன்படுத்தியிருப்பது புதுமையிலும் புதுமை!


தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:

3/6 - மூன்று தோட்டாக்கள்!

பயங்கரவாதியின் பன்ச்:

THE BUSINESSMAN - டைம்-பாஸுக்கு சிறந்த முதலீடு!

ட்ரைலர்:  

Wednesday, January 25, 2012

நண்பன்: 12.01.2012 - திரைவிமர்சனம்!

வணக்கம்,

வழக்கமாக புதிய தமிழ் படங்கள் எல்லாமே சூட்டோடு சூட்டாக ஊட்டியில் ரிலீஸாகி விடும்! ஆனால் நண்பன் மட்டும் ஒரு வாரம் கழித்தே ரிலீஸானது! இதன் பிண்ணனியில் என்ன அரசியல் உள்ளதென்று தெரியவில்லை! ஆகையால் ஒரு வாரம் தாமதமாகவே இப்படத்தை கோவைக்கு சென்று பார்த்தேன்!

கதை:

3 இடியட்ஸ் ஹிந்தி படத்தின் தமிழாக்கம்!

சுவாரசியமான துணுக்குகள்:
  • ரீமேக் படங்கள் என்றாலே ஒரிஜினலிலிருந்து தமிழுக்கு மாற்றும் போது ஒரிஜினலின் தண்மை கெட்டுப் போவது வழக்கம்! அந்த பிரச்சனையை மனதில் வைத்துக்கொண்டதாலோ என்னவோ ஷங்கர் ஹிந்திப் படத்தை அப்படியே காட்சிக்கு காட்சி இம்மி மாற்றாமல் தமிழுக்கு கொண்டு வந்துள்ளார்!
  • இவ்வாறு செய்வதால் ஒரிஜினலில் உள்ள எல்லா குறைகளும் அப்படியே ரீமேக்கிலும் வரும் அபாயத்தை ஷங்கர் ஏனோ உணரவில்லை! 
  • ஹிந்தி படத்தின் தண்மை மாறாமல் தமிழுக்கு தருவதெல்லாம் சரிதான்! அதற்காக வரிக்கு வரி மாறாத வசனங்களும், காமிரா ஆங்கிள் கூட மாற்றாத ஷாட்டுக்களும், கதாபாத்திரங்களின் விசித்திரமான பெயர்களும் ஏனோ பொன்னி காமிக்ஸ் படிக்கும் உணர்வையே தருகின்றன!
  • விஜய் அழகாக வரும் படங்கள் (அழகிய தமிழ் மகன், சச்சின்) ஓடாது என்கிற மாயையை இப்படம் உடைத்திருக்கிறது!
  • முதல் பாடலில் வரும் ஊட்டி காட்சிகள் படமாக்கப் பட்ட விதம் அருமை! வழக்கமான இடங்களைத் தவிர்த்து வேறு இடங்களை காட்சிப்படுத்தியது புதுமை! ஊட்டியில் மீண்டும் பெரிய பட்ஜெட் தமிழ் படங்கள் (தெய்வத் திருமகள், நண்பன்) படமாக்கப் படுவது வரவேற்கத்தக்கது!
  • கல்லூரியில் வரும் ஆரம்பக் காட்சிகள் அப்படியே ஹிந்தி படத்தை ஒத்திருப்பதால் ரொம்பவே பொறுமையை சோதிக்கின்றன! சத்யன் வந்த பிறகுதான் படத்தை ஒன்றிப் பார்க்க முடிகிறது!
  • விஜய் ஆமிர் கானை அப்படியே இமிடேட் செய்ய முயல்கிறார்! இதனால் வழக்கமான இளைய தளபதி மிஸ்ஸிங்! இது நல்லதா, கெட்டதா என்று என் போன்ற வேட்டைக்காரன், சுறா ரசிகர்களுக்கு விளங்கவில்லை!
  • விஜய்யின் க்ளைமாக்ஸில் கெட்டப் மாற்றி பயமுறுத்தும் பாணி நண்பனிலும் தொடர்கிறது! இதை மட்டும் இளைய தளபதி கைவிட்டாரென்றால் பரவாயில்லை! 
  • வழக்கமாக திரையில் தோன்றினாலே எரிச்சல் பொத்துக் கொண்டு வரும் ஸ்ரீகாந்த் இப்படத்தில் ரசிக்க வைக்கிறார்! அவருடைய கரியரில் நண்பன் மிக முக்கியமான படம்! ஜீவா வழக்கம் போல கொடுத்த பணியை சிறப்பாக செய்திருக்கிறார்!
  • இலியானாவை பார்த்தால் பாவமாக இருக்கிறது! உடம்பை குறைக்கிறேன் பேர்வழி என்று சோறு திங்காமல் வாடி வதங்கி போயிருக்கிறார்! அவரது சிறப்பம்சமான இடுப்பு வளைவுகள் கூட காணாமல் போய்விடுமளவுக்கு டயட்டில் இருக்கிறார்! யாராவது அவருக்கு கொஞ்சம் நல்ல சோறு வாங்கிக் கொடுங்கப்பா! 
  • சத்யராஜ், சத்யன் இருவரும் சிறப்பாகவே செய்திருந்தாலும் ஹிந்தியில் வரும் போமன் இராணி, ஓமி வைத்யாவோடு கம்பேர் செய்யாமல் இருக்க முடியவில்லை! இருவருமே அற்புதமான டைமிங் சென்ஸ் உள்ள நடிகர்கள்! ஹிந்தியில் வரும் அதே பாணியில் நடித்திருப்பதால் தமிழில் அவர்களின் தனித்தண்மை காணாமல் போய்விடுகிறது!
  • பாடல்களில் வழக்கமான ஷங்கரின் பிரம்மாண்டமும், விஜய்யின் புயல் வேக நடனமும் மிஸ்ஸிங்! பாடல்களிலாவது ஷங்கர் தன் முத்திரையைப் பதித்திருக்கலாம்!
  • விஜய்க்கு ஒரு ஓபனிங் சாங், சண்டைக் காட்சி, பன்ச் டயலாக் கூட கொடுக்காத ஷங்கர் இலியானாவின் இல்லாத இடுப்பை வர்ணித்து ஹிந்தியில் இல்லாத ஒரு குத்துப் பாடலை வைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை! இலியானாவின் இடுப்புக்கு இளைய தளபதியை விட மார்கெட் வால்யூ அதிகமாகிவிட்டதா என்ன?!!
நிறைகள்:
  • ஒரிஜினலின் தண்மை மாறாமல் தமிழுக்கு தந்திருப்பது!
  • ஒளிப்பதிவு!
  • சத்யன்!
  • ஸ்ரீகாந்த்!
  • படத்தில் ஷங்கரும், விஜய்யும் காணவில்லை!
குறைகள்:
  • ஒல்லி பிச்சான் இலியானா!
  • ஹாரிஸ் ஜெயராஜ்!
  • படத்தில் ஷங்கரும், விஜய்யும் காணவில்லை!
தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:



4/6 - நான்கு தோட்டாக்கள்!

ஒரு கட்டை விரல் மேலே!

பயங்கரவாதியின் பன்ச்:

நண்பன் - கலர் ஜெராக்ஸ்!

ட்ரைலர்:

Saturday, January 21, 2012

வேட்டை: 14.01.2012 - திரைவிமர்சனம்!

வணக்கம்,

பொங்கலுக்கு ரிலீஸான இரண்டு படங்களில் வேட்டை மட்டுமே ஊட்டியில் ரிலீஸாகியுள்ளதால் முதலில் இதைத்தான் பார்க்க வேண்டியிருந்தது! நண்பன் ஏன் ரிலீஸாகவில்லை என்று தெரியவில்லை! வரும் வார இறுதியில் கோவையில்தான் பார்க்க வேண்டும்!

கதை:

அவசர போலீஸ் 100 என்றொரு பாக்யராஜ் படம் 1989ல் வெளியானது! அதே கதையை டபுள்-ஆக்‌ஷன் பாக்யராஜுக்கு பதில் இரண்டு ஹீரோக்களை போட்டு எடுத்திருக்கிறார் லிங்குசாமி! தமிழ் சினிமாவின் கதை வறட்சிக்கும் பாக்யராஜின் மேதமைக்கும் இது ஒரு நல்ல் உதாரணம்!

சுவாரசியமான துணுக்குகள்:
  • படத்தில் வரும் சண்டைக்காட்சிகள் எல்லாம் பேட்மேன் பிகின்ஸ், ஃப்ரென்ச் கனெக்‌ஷன் போன்ற ஆங்கிலப் படங்களையே ஏனோ நினைவு படுத்துகின்றன!
  • படத்தில் அனல் பறக்கும் பன்ச் வசனங்கள் ஏகப்பட்டது இருந்தாலும் அவையெல்லாம் ஆர்யா வாயிலிருந்து சப்பை உச்சரிப்பில் வெளிவரும் போது மொக்கையாகி விடுகின்றன!
  • முதல் பாதியில் வரும் பயந்தாங்கொள்ளி மாதவன் ஓகே! ஆனால் க்ளைமாக்ஸில் அவருக்கு வீரம் வந்த பின் தாங்க முடியவில்லை! ‘எனக்கே ஷட்டரா?’ என்று அவர் பன்ச் வசனம் பேசும் போது சிரிப்புதான் வருகிறது!
  • சமீரா ரெட்டி பார்க்க சகிக்கவில்லை! அமலா பால் ஓகே! ஆனால் ஓவர் மேக்கப்பில் அசிங்கமாக தெரிகிறார்!
  • பாடல்கள் எதுவும் பெரிதாக மனதில் ஒட்டவில்லை! சண்டக்கோழி, பையா என்று தூள் கிளப்பிய யுவன், லிங்குசாமி கூட்டனி இதில் சொதப்பியுள்ளது!
  • ஒளிப்பதிவு நீரவ் ஷாவாம்! படத்தில் அப்படி தெரியவேயில்லை!
  • திடீர் திடீரென வந்து மாதவனை பாராட்டி விட்டு செல்லும் நாசர் வரும் காட்சிகள் சிரிப்புக்கு கியாரண்டி!
  • இத்தனை குறைகளையும் மீறி ஒரு சிறந்த டைம்-பாஸ் படத்தை வழங்கியிருக்கும் லிங்குசாமி தான் படத்தின் நிஜ ஹீரோ! அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!
நிறைகள்:
  • லிங்குசாமி
குறைகள்:
  • ஆர்யா
  • சமீரா ரெட்டி
  • யுவன் ஷங்கர் ராஜா
  • நீரவ் ஷா
தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:

3/6 - மூன்று தோட்டாக்கள்!

பயங்கரவாதியின் பன்ச்:

வேட்டை: எங்களது மொக்கை ஃபிலிம் க்ளப்பிற்கேற்ற சிறந்த டைம்-பாஸ் படம்!

ட்ரைலர்: